Photo by Swipe 👋 on Unsplash

மார்கழி மாதத்தின் முதல் நாள். ஆண்டாள் பாவை நோன்பு நோற்று திருப்பாவை என்னும் பக்தி மணம் கமழும் தமிழ் பாசிரங்களை தரத்துவங்கிய நாள். முப்பது பாடலகளிலும் கண்ணனை நாராயணன் , மாதவன் , கேசவன் எனப் பலபடியாக அழைத்து மகிழ்ந்தாலும் அவள் அதிகம் சொல்லி மகிழ்ந்தது “கோவிந்தா “ என்னும் திருநாமமே.

அதிலும் குறிப்பாக கோவிந்தனை “குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா “ என்று கூவி அழைக்கின்றாள். ( கறவைகள் பின் சென்று பாசுரம் ) பிற்காலத்தில் இதே வரிகளை மூதறிஞர் ராஜாஜி “குறை ஒன்றும் இல்லை கோவிந்தா “ என்று ஒரு பாடல் எழுதி திருமதி .எம்.எஸ்.சுப்புலக்‌ஷ்மி அவர்களால் ஐ.நா சபையில் பாடி , இன்றுவரை இல்லங்கள் தோறும் ஒலிக்கின்றது.

மோலெழுந்தவாரியாகப் பார்க்கும் பொழுது ஒரு பக்தன் கோவிந்தனிடம் தனக்கு குறை எதுவும் இல்லை என்று சொல்வது போல இருக்கும். உண்மையில் கோவிந்தனுக்கு குறை எதுவும் இல்லை என்பதாக ஒரு பொருள் வருவதுபோல அமைந்திருப்பது நம்மை வியப்பில் ஆழ்த்தும் ஒரு விஷயம் .

“ என்ன? கோவிந்தனுக்கு குறை என்று ஒன்று இருக்குமா ? “ என்ற கேள்வி நம் மனதில் தோன்றுவது இயற்கையே. அதற்கான ரசமான விளக்கம் ஒன்று சமீபத்தில் திரு . உ.வே.துஷ்யந்த் ஶ்ரீதர் உரையின் மூலம் அறிய முடிந்தது. அந்த ரசானுஒஅவத்தை பகிரவே இப்பதிவு .

கிருஷ்ணனுக்கு முந்திய அவதாரம் ஶ்ரீராம அவதாரம். அந்த அவதாரத்தில் இராமபிரானுக்கு பல குறைகள் மனதளவில் இருந்ததாம். அக்குறைகள் எல்லாம் தீர்த்துக் கொள்ளவே தனது அடுத்த அவதாரத்தில் , அந்த குறைகள் எல்லாம் தீரும்படி அமைத்துக் கொண்டானாம். அப்படி குறைகளே இல்லாதபடி இருந்த காரணதால்தான் குறை ஒன்றும் இல்லாத கோவிந்தனாக அமைந்தானாம்.

அப்படி என்ன குறைகள் ஶ்ரீராமனுக்கு ?

முதல் குறை தகப்பனார் தசரதனால் இராமனுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. மிகச்சிறு பிராயத்திலேயே விசுவாமித்திரர் பின்னால் தாடகை போன்றவர்கள் சஞ்சரிக்கும் வனத்துக்கு அனுப்பினார். பின்னர் கைகேயிக்கு வரம் கொடுத்து வனத்துக்கு அனுப்பினார். பின்னர் இறந்து போனார். ஆனால் வசுதேவனோ கண்ணனை கம்சனிடம் காப்பதற்காக நடு இரவில் , கொட்டும் மழையில் பயணித்து ஆயர்பாடியில் நந்த கோபாலன் பாதுகாப்பில் விட்டுச் சென்றார்.

சரி. தந்தைதான் அப்படி. தாயாராவது தாலாட்டுப் பாடி , உணவு ஊட்டி சீராட்டி வளர்த்தாரா என்றால் அப்படி ஒரு விஷயம் வால்மீகத்திலும் இல்லை. கம்பனாலும் சொல்லப்படவில்லை. ஆழ்வார் மட்டுமே “மண்ணு புகழ் கோசலை “ என்றுத் தொடங்கி

பத்து பாசுரங்களைப் பாடி தாலாட்டினார். ஆனால் கண்ணனுக்கு வளர்ப்புத் தாய் தேவகி பாலூட்டினாள். அவன் விளையாட்டுகளை ரசித்து மகிழ்ந்தாள். இந்த பாக்கியம் தனக்கு கிடைக்கவில்லையே என்று தேவகி வருந்தினாள்.

பால்ய காலத்தில் நட்பு எதுவும் இராமனுக்கு அமையவில்லை. குகன் , சுக்ரீவன் , விபீஷனன் ஆகியோரும் நண்பர்களாக இல்லாமல் , ஐவர் , அறுவர் , எழுவர் என சகோதரர்காளாகவே அமைந்தார்கள்.ஆனால் கோவ்ந்தனுக்கோ குசேலன், அர்ஜுனன் என பலரின் நட்பு கிடைத்தது.

ஶ்ரீராமனுக்கு கிடைத்த குருமார்களும் அப்படியே. பின்னர் ஒரு சமயத்தில் தாரை சுட்டிக்காட்டியது போன சினமும் காமமும் பீடிக்கப்பட்ட விசுவாமித்திரர் ஒரு குரு. தான் ஒரு பிரம்ம ரிஷி என்று கர்வம் கொண்டு விசுவாமித்திரரிடம் யுத்தம் செய்த வசிட்டர் மற்றொரு குரு. இவர் குறித்த நாளில் பட்டாபிஷேகம் கூட நடக்கவில்லை. ஆனால் கண்ணனுக்கு அறுபத்து நான்கே நாட்களில் குருகுலவாசத்தில் அனைத்து கலைகளையும் கற்பித்த சாந்தீபன் என்பவர் குறை சொல்ல முடியாத குருவாக அமைந்தார்.

ஶ்ரீராமனுக்கு ஒரெ ஒரு சகோதரி இருந்தாள். சாந்தா என்னும் பெயர் கொண்ட அவளை இராமன் சந்திக்கவே இல்லை. அதனால் சகோதரியின் பாசம் இன்னதென்பதையே அறியாமல் போன இராமனின் குறை தீர திரௌபதியிடம் அதீத பாசம் காட்டி சகோதரியின் அன்பை அவர் அறிந்து கொண்டார்.

அமைந்த ஒரே மனைவியையும் இராவணன் தூக்கிப் போக துக்கத்தில் ஆழ்ந்து போனார் ஶ்ரீராமர். ஆனால் சிசுபாலனால் கவரப்பட இருந்த ருக்மணியை மீட்டு மணம் செய்து கொண்டார் கிருஷ்ணர்.

இராவணனுடன் யுத்தம் ஆரம்பிக்கும் முன்னர் அனுமனை , அங்கதனை தூது அனுப்பிய இராமனுக்கு தன்னால் யாருக்கும் தூது போக முடியவில்லையே என்ற குறை இருந்ததாம். அந்தக் குறையையும் பாண்டவர்களுக்காக தூது போய்த் தீர்த்துக் கொண்டானாம்.

நடையில் உயர் நாயகன் என்ற சிறப்பு பெற்ற இராமனுக்கு பேசுவதற்கான சந்தர்ப்பம் அதிகம் வாய்க்கவிலை.வாழ்நாள் முழுதும் விஸ்வாமித்திரர் , வசிட்டர் , பரத்வாஜர் , அகத்தியர் என அனைவரிடமும் உபதேசங்கள் மட்டுமே பெற்ற இராமன் உபதேசிக்கும் வாய்ப்பு பெற்றது கீதை சொன்ன கண்ணன் என்பதால் அந்தக் குறையும் நீங்கப் பெற்றான்.

எப்பொழுதுமே எல்லோராலும் போற்றப்பட்டு புகழுரைகளையே கேட்டு திகட்டிப்போய் யாராவது தன்னை இகழ்ந்துப் பேச மாட்டார்களா என்று ஏங்கிப் போனான் இராமன். தன்னால் கொல்லப்பட்ட வாலி , அவன் மனைவி தாரை , இராவணன் அவன் மனைவி மண்டோதரி ஆகியோர் கூட இராமனை திருமாலாகவே காண்கின்றார்கள். ஆனால் கேட்போர் செவி சுடும்படி சிசுபாலனும் , துரியோதனனும் கண்ணனை இகழ்ந்து பேசி இராமனின் குறையத் தீர்த்தார்களாம்.

அகலிகை , விராடன் , கபந்தன் என பலருடய சாபத்தைப் போக்கின இராமனுக்கு தன்னிடம் யாருமே கோபப்பட்டு பேசவே இல்லை என்ற குறை தீர காந்தாரி கண்ணன் மீது கோபாப்பட்டு சாபமே கொடுத்தாள்.

இப்படியாக பதினோராயிரம் ஆண்டுகளில் இராமன் மனதில் பல குறைகள். அவைகள் நீங்கப்பட்டவானய் நூற்று இருபத்தைதே ஆண்டுகள் வாழ்ந்தலும் குறைகள் நீங்கப்பட்டவனாய் குறை ஒன்றும் இல்லாதவனாய் கோவிந்தன் இருந்தான்.

அதனால் அவன் குறை ஒன்றும் இல்லாத கோவிந்தந்தானே

.    .    .

Discus