Source: Daniel Álvasd on Unsplash

கண்ணே கணியமுதே என்பர், கனிந்து விடாதே!
வாடா மலரன்றோ என்பர், வதங்கி விடாதே!
முத்துப் பற்கள் என்பர், முறுவலித்து விடாதே!
பவளச் செவ்விதழ் என்பர், பயந்து விடாதே!
வேள்விழியால் என்பர், கேள்விக் கணைகளைத் தொடு!
'ஞானம்' எதற்க்கு என்பர், நாணி விடாதே!
சங்குக் கழுத்து என்பர், சரிந்து விடாதே!
'சொற்கள்' கொண்டு சிறையிட்டால், பின்
நான் என் செய்வேன்? என்கின்றாயா? - உன்
அலைஅலையாய் கூந்தலில் அண்டத்தையே முடிந்து விடு!
மின்னும் மூக்குத்தியை நிலவிலே நட்டுவிடு!
காந்தப் பார்வைக் கொண்டு காமுகர்களை எரித்து விடு!
உன்னதக் கரங்களால் உலகத்தை உனக்காக்கு!
நம்பிக்கைக் கொடியை வானுயுர பறக்கவிடு! - பின்
தன்மானச் சிங்கம் சிம்மாசனம் ஏறும்!
கவலையும் கலக்கமும் காணாமல் போகும்!
'வெற்றித் தேவதை' வாசலிலே காத்திருப்பாள்!
'விரக்தியும் தோல்வியும்' விடைப்பெற்றுச் செல்வார்கள்!
பரணித் தோறும் உனக்கு பூமாலை சூட்டப்படும்!
விதியும் இல்லை, சதியும் இல்லை - உன்
மதியினைக் கொண்டு மானுடம் தழைக்கச் செய்!
மங்கையரின் மாற்றத்தால் பார் எங்கும் மார்க்கமே!
வெற்றிக் கொடிக் கட்டு! பெண்ணே! மாண்புமிகு மகளிராய்!!

.    .    .

Discus