Image by Myriams-Fotos from Pixabay 

இறைவா உன்னை உபாசிப்பவர் பலர்.
தரிசிக்க உன்னை பகட்டு பரிசுகள் பலவற்றுடன்,
மேளதாளங்கள் முழங்க வந்து,
முத்தும் மணியும் பவளமும் அணிவித்து, உன்னை அழகுறச் செய்கின்றனர்.
ஆனால் நித்யதரித்ரியான நானோ ஒரு செல்லாத நாணயம் கூட இன்றி
வெறும் கையை வீசிக்கொண்டு,
உன்னை பூஜிக்க வந்துள்ளேன்.
படையல் செய்ய பத்து காசில்லை,
தூபதீபமோ துர்லபமானது.
கரங்களிலே வலுவில்லை,
மலர்களை மாலையாக கட்டி உனை தொழ,
பண்ணிசைத்து நினைப் பாட இனிமையான குரலில்லை,
தானம் தான் செய்தேனோ?
தக்ஷிணை தான் கொடுத்தேனோ? எப்போதேனும், எவருக்கேனும்,
அறியாள் இந்த அனாதை,
பூஜிக்கும் முறையும் அறியேன்,
எனினும் ஐயனே! உனைக் காண வந்தேன்.
ஏழை நான்,
பக்திப் பித்து பிடித்த என் இதயத்தை உன்னிடம் சமர்ப்பிக்க வந்துள்ளேன்,
உன் திருவடிகளில் என்னையே சமர்ப்பிக்கிறேன்,
நீ விரும்பினால் ஏற்றுக்கொள்,
இந்த எளிய பக்தை உன் கடாக்ஷத்தை யாசிக்கிறாள்,
ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் உன் விருப்பம்.
வீடுபேறு வேண்டேன்,
நின் தரிசனம் ஒன்றே போதும். 

.    .    .

Discus