Photo by Markus Spiske on Unsplash
”சரசு ஏ சரசு” கோமதியின் குரல் தோட்டத்தில் இருந்து ஓங்கி ஒலித்தது. கெமிஸ்ட்ரி பாடம் எழுதிக் கொண்டிருந்த சரசு எழுதுவதை நிறுத்தாமலேயே “இன்னாமா?” என்று பதில் குரல் கொடுத்தாள்.
“சரோசா எங்க? சங்கீதா, சாவித்ரி ரெண்டும் எந்திரிச்சுதா? உலை கொதிக்குதா பாரு, ராசு வீட்டுல மோட்டார் போட்டிருப்பாங்க, போய் நாலு குடம் தண்ணி எடுத்தா,” மேலே மேலே உத்தரவுகள் பிறப்பித்துக் கொண்டே இருந்தாள் கோமதி.
“யம்மா நானு ப்ளஸ் டூ படிக்கிறேன். நேரத்துக்கு ஸ்கூல் போவாட்டி டீச்சர் திட்டுவாங்க.”
” நீ இஸ்கோலுக்கு போவலைன்னு அத்த இளுத்து மூடிட மாட்டாங்க. வேலைய பாரு முதல்ல.” தாயின் குரலில் இருந்த கடுமையை உணர்ந்து முனகிக் கொண்டே பாதி எழுதிய நோட்டை மூடி வைத்து விட்டு எழுந்து சென்றாள் சரசு என்னும் சரஸ்வதி.
“ரோசா ஏ சரோசாஆஆ” அம்மா அடுத்தவளை கூப்பாடு போட ஆரம்பித்து விட்டாள். புழுதியில் பையன்களுடன் விளையாடிக் கொண்டிருந்த ரோசா, பெயருக்கேற்றார் போல் சிவந்த நிறம், ஓடி வந்தாள்.
“சரசு கூடப் போயி தண்ணி எடுத்தா போ, எல்லாம் என் தலையெழுத்து, நாலும் பொட்டப் புள்ளங்களா பிறந்துடிச்சி.” தினமும் ஒருமுறை சலித்துக் கொள்ளாவிட்டால் தின்னும் சோறு செரிக்காது கோமதிக்கு.
“யம்மா நாங்க ஸ்கூலுக்கு போறோம்.” சரசுவும் ரோசாவும் புத்தகப் பையை சுமந்து கொண்டு ஓடினர்.
“ஏண்டி கோமதி, பிள்ளங்க நீராகாரமாச்சும் குடிச்சாங்களா?” மாமியார் மீனாட்சி தலையிலிருந்து சுள்ளிக்கட்டு சுமையை இறக்கியவாறே வினவினாள். “இல்லத்தே, பாடம் எழுதிட்டே இருந்ததா, நேரமாயிட்டு, ஓடிட்டாங்க, மதியம் சத்துணவு சாப்புடுங்க.” என்றாள் கோமதி.
“இந்த வருசத்தோட படிப்ப நிறுத்தோணும், களை புடுங்க இன்னும் மத்த வீட்டு வேலக்கி எல்லாம் மச்சு வூட்டுல ஆள் கேக்கறாங்க.” பேசிக் கொண்டே சென்றாள் மீனாட்சி.
ஓட்டமும் நடையுமாக பள்ளியை அடைந்த சிறுமிகள் இருவரும் பள்ளி மணி ஒலிக்கும் ஓசையை கேட்டு இன்னும் வேகமாக ஓடினர். ப்ரேயர் முடிந்து விட்டது. சரசு +2, ரோசா 8ம் வகுப்பு. இருவரும் அவரவர் வகுப்பு வாயிலில் நின்று, உள்ளே செல்ல அனுமதி கேட்டனர். ‘இன்னிக்கும் லேட்டு, சரியா தல சீவல.” என்றவாறே ரோசாவை அனுமதித்தாள் பாமா டீச்சர்.
“சரஸ்வதி, கெமிஸ்ட்ரி கொஸ்சின் ஆன்சர் எழுதினியா? வேதியியல் பாடத்துல சமன்பாடுகள், சேர்மங்கள் பெயர்களை நினைவு வச்சுக்கறதுக்காக ஒன் மார்க் கொஸ்சின் ப்ரிப்பேர் செய்யச் சொன்னேன். ஒன் மார்க்குல 30 மார்க் அள்ளிடலாம். நான் சொன்ன மாதிரி எழுதிக் கொண்டாந்தியா? என்று பேசியவாறே சரசுவை உள்ளே அனுமதித்தாள் , நீலா டீச்சர்.
டீச்சரிடம் நல்ல பெயர் எடுத்திருந்தாள் சரசு. “எழுதிட்டேன் டீச்சர், ஹைட்ராக்ஸி வழிப் பொருட்கள், கார்பாக்ஸிலிக் அமிலம், எல்லாத்திலேர்ந்தும் ஒவ்வொரு கேள்வி எழுதினேன்.” பெருமிதம் தொனித்தது சரசுவின் குரலில். நீலா டீச்சர் புன்முறுவலுடன் வாங்கிப் பார்த்தாள். மணி மணியான கையெழுத்து, கச்சிதமாய் எழுதியிருந்தாள்.
“வெரிகுட், ஸ்டூடண்ட்ஸ், எல்லாரும் சரஸ்வதி நோட்ட பாத்து எழுதிக்குங்க.”
சகோதரிகள் இருவரும் மதிய சத்துணவு உண்ணச் சென்றனர். காலையில் எதுவும் சாப்பிடாததால் பசியில் தட்டையே விழுங்காத குறையாக உண்டனர். “ரோசா, டீச்சர் என்னை ரொம்ப பாராட்டினாங்க.” என்றாள் சரசு. ரோசாவும் பதிலுக்கு “ என்னையும் டிராயிங் நல்லா வரைஞ்சிருக்கிறேன்னு பாமா டீச்சர் சொன்னாங்க.” “இன்னிக்காச்சும் சாயந்திரம் சாமி கும்புடணும், கோயிலுக்கு ரொம்ப நாளா போவல்ல. ப்ளஸ் டூல நல்ல மார்க் எடுக்கணும்.”
“சரசு, ஆயா சொல்லுது, ஸ்கூல் போக வேணாமாம், நா தங்கச்சிகள பாத்துக்கணுமாம், நீ மச்சு வீட்டு வேலக்கி போகணுமாம். எனக்கு அழுகாச்சியா வருது சரசு.” ரோசாவின் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது. “அளுவாதடி ரோசா, டீச்சரு அப்பாருகிட்ட வந்து பேசரேன்னு சொல்லியிருக்காங்க.”
“அது மட்டும் இல்லடி சரசு, நம்ம அத்தை மவ லச்சுமி படிப்பையும் நிறுத்தி கல்யாணம் கட்டி குடுக்க போறாங்களாம்”
“யாருடி சொன்னாங்க, அத்தை மேக்கால டவுன்ல இல்ல இருக்கு. அத்தையே ப்ளஸ் டூ படிச்சிருக்குது, இங்கிலிஷ் தெரியும், லட்சுமிய படிக்க வக்கணும்னு தானே அவங்க ஆச.”
“எல்லாம் ஆயாதான் சொல்லுது. சேகரு மாமா போன வருசம் செத்துப் போயிட்டதால பொம்பள புள்ளய கன்ணாலங்கட்டாம வக்க கூடாதாம். அப்பவும் ஆயாவும் நேத்து ராத்திரி பேசிட்டிருந்தாங்க.”
சரசுவிற்கு திக்கென்றது. கல்லூரியில் சேர்ந்து நிறைய கல்வி பெற வேண்டும் என்ற கனவு கனவாகவே நின்று விடுமோ என்ற அச்சம் துளிர்த்தது. அத்தை சிவகாமியை தூண் போல் நம்பியிருந்தாள்.
சிவகாமி சரசுவின் தந்தை கலியனுடன் கூடப் பிறந்த ஒரே சகோதரி. ஏழைப் பிறந்தகமாக இருந்தாலும், வசதியான குடும்பத்தில் வாழ்க்கைப் பட்டிருந்தாள். கர்வமில்லாதவள். நிறைய படிக்க வேண்டுமென்று விரும்பியவள். ஆனால் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளத் தெரியாமல் பெரியோர் சொல்படி திருமணம் புரிந்து ஒரு பெண்ணையும் பெற்றெடுத்து தன் நிறைவேறாத ஆசைகளை மகள் மூலம் நிறைவேற்ற முயற்சித்துக் கொண்டிருப்பவள். சிவகாமியின் கணவன் சேகர் மனைவி மகளிடம் மிகுந்த ஆசையுடன் இருந்தான். ஆனால் விதி வேறு விதமாக விளையாடி ஒன்றரை வருடம் முன்பு சேகரை மஞ்சள் காமாலைக்கு பலி கொண்டது. கலியன் ஆடிப் போனான். தங்கையை வைத்து பராமரிக்க, நான்கு பெண் குழந்தைகளைப் பெற்ற அவன் பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை. ஓரளவு வசதியுடன் இருந்த சிவகாமியும் அதை விரும்பவில்லை.
அண்ணன் குழந்தைகளிடம் அக்கறையும் அன்பும் காட்டினாள். கல்வியின் மேன்மையை கருத்துடன் அடிக்கடி எடுத்துரைப்பாள். தன் மகளையும் அண்ணன் மகள்களையும் ஒரு போதும் வேறு படுத்தி பார்த்ததில்லை. கணவனை இழந்தாலும் மகளை படிக்க வைத்து விட வேண்டும் என்பதில் திண்ணமாக இருந்தாள். ஆனால் தற்போது அண்ணன், தாய், கொழுந்தன், மாமியார் இவர்களின் நச்சரிப்பு பொறுக்க முடியவில்லை. கணவரின் புகைப்படத்தின் முன் அமர்ந்து “அத்தான், எனக்கு தைரியத்தை தாங்க அத்தான்,அண்ணன் பொண்ணுங்க, நம்ம பொண்ணு எல்லாத்தியும் நல்லா படிக்க வக்கணும்னு நினைக்கிறேன், நடத்தி தாங்க அத்தான்.” என்று வேண்டுவதைத் தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை அவளுக்கு.
“அம்மா பப்ளிக்கு பரிட்சை வருது. என்னிய நேரத்துக்கு பள்ளிக்கூடம் போக விடும்மா” தினம் தினம் இதே புலம்பல் தான் சரசுவிற்கு.
ப்ளஸ் டூ தேர்வுகள் முடிந்தன. எல்லா பரிட்சையும் நன்றாகவே எழுதி இருந்தாள் சரசு. தோழிகள் பலரும் எஞ்சினியரிங் எண்ட்ரன்ஸ், மெடிக்கல் முன் தேர்வு என தயாராகிக் கொண்டிருந்தனர்.
“ஸரசு நீ என்ன செய்யபோறே?” “தெரியல டீச்சர்” பதிலளித்தவள் குழப்பத்துடன் வீட்டிற்கு வந்தாள். ரோசா தாயிடம் கெஞ்சி குழைந்து கொண்டிருந்தாள்.
“அம்மா, இந்த வருஷமாவது லீவுக்கு அத்தை வீட்டுக்கு போறோம்மா நாங்க. டில்லி, பம்பாய்லயா இருக்காங்க, தமிழ் நாட்டுல தானே, அனுப்பினா என்னா உனுக்கு? நான்கைந்து வருடங்களாகவே குழந்தைகளின் வேண்டுகோளும் தொணதொணப்பும் தாங்கவில்லை.
“பன்னண்டாவது பரிச்ச முடிஞ்சுது இல்ல,இப்ப போகலாம். ரிஜல்ட்டு வார வரைக்கும் அங்ஙன இருந்துட்டு வரட்டும். “ கோமதியும் சிபாரிசு செய்தாள்.
“கோமதியக்கா, உங்க நாத்தி போன் பண்ணுச்சி, ராத்திரி வண்டிக்கி புறப்பட்டு வருதாம், ஸ்டேஷனுக்கு வரச் சொல்லிச்சி, “ பக்கத்து வீட்டு சுகுணா குரல் கொடுத்தாள்.
சிவகாமி, லட்சுமியுடன் புறப்பட்டுக் கொண்டிருந்தவள் கொழுந்தனிடம் கூறினாள்: “தம்பி, உங்களுக்கு ரண்டும் ஆம்புள பசங்க, எப்படியாச்சும் பொழச்சுக்குவாங்க, பொண்ணுங்கள படிக்க வச்சா தன்னம்பிக்கையோட இருப்பாங்க, நான் போய் என் அண்ணன் பொண்ணுங்கள கூட்டி வரேன்”
வாசல் வரை வந்த மாமியார் மரகதம் மருமகள் கையில் 500 ரூபாய் நோட்டை வைத்தாள். பிள்ளைங்களுக்கு தீனி ஏதாச்சும் வாங்கிட்டு போ சிவகாமி. அண்ணன் பொண்ணுங்களை கூட்டிட்டு வா. சின்னவனை நான் சமாளிக்கிறேன், நீ சொன்ன மாதிரி அவனுக்கு ரண்டும் பையன்களா போச்சு, அதான் பொட்டப் புள்ள அருமை தெரியல.” படி இறங்கிய சிவகாமி, நின்று மாமியார் காலைத் தொட்டு வணங்கி விட்டு அப்படியே அணைத்துக் கொண்டாள். யார் பெரிய எதிரி என்று நினைத்தாளோ அவரே சிறந்த துணை என்ற உண்மை கண்ணீரை வரவழைத்தது.
நாத்தனாரைக் கண்ட கோமதி முகம் மலர்ந்தாள். “வா ராசாத்தி” லட்சுமியின் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டாள். வயக்காட்டிலிருந்து வந்த கலியன் தங்கை ஆசையாய் வாங்கி வந்த தின்பண்டங்களை ஆர்வத்துடன் ருசி பார்த்தான்.
“அண்ணே , ரிசல்ட் வந்த உடனே சரசுவையும் லட்சுமியையும் காலேஜ்ல சேக்கணும்.”
“என்ன சொல்ற சிவு, காலேஜி ஃபீசு எம்புட்டு, சேர்றதுக்கு அட்ட வாங்கவே நிறய ரூவா ஆகுமே.”
“அட்டயா ? அதென்னாது”
“அதாம்மா .. ஃபாரம், சேக்கறதுக்கு, போன வருசம் ராமன் மவன சேக்கறதுக்கு ஃபாரம் வாங்க நிறய ரூவா ஆச்சுன்னு சொன்னான்.”
“அப்ளிகேஷன் ஃபார்மா? அதெல்லாம் பாத்துக்கலாண்ணே, இவங்க நல்ல மார்க்கு வாங்கிடுவாங்க. இப்ப கொஞ்ச நாளைக்கி என் கூட அனுப்பி வையி. உம்புள்ளைங்களும் நாலு எடம் பாக்கட்டுமே. மச்சு வீட்டு வேலக்கி அனுப்ப வேண்டாம். என்ன கட்டி குடுக்கறதுக்கு முந்தியும் காடு, கழனி வேல, வீட்டு வேலன்னு எங்கியும் அழைச்சிட்டு போனதில்ல, நா நல்லா டிராயிங் போடுவேன். டிராயிங் காம்படிஷனுக்கு சென்னைக்கு கூட்டிட்டு போறேன்னு வாத்தியாரய்யா எம்புட்டோ கெஞ்சினாங்க, விட்டியா நீயி? ரோசா நல்லா வரையுது, நா அதுங்கள உசத்தியா கொண்டு வருவேன் பாரு.” மூச்சு விடாமல் பேசினாள் சிவகாமி.
சிவகாமிக்கு என்றுமே ரோசா, சரசு மீது அலாதி பிரியம். சிறு வயதிலிருந்தே சரசு எதையும் திருத்தமாக செய்வது வியப்பாக இருக்கும். பாத்திரம் துலக்கிய நீர் தோட்டத்து கத்திரி வெண்டைக்கு பாயும், சரசுவின் கை வண்ணத்தில் ஓட்டு வீடும் கவிதையாய் காட்சி அளிக்கும். நேர்த்தியாக மெழுகப் பட்ட அடுப்படி, உடைந்த மண்பானைகளில் தளதளக்கும் கொத்துமல்லி, கீரைகள், பின்னிய ஓலைகளால் நறுவிசாக அடைக்கப்பட்ட விரிசல்கள், இவை யாவுமே ஏழ்மையிலும் ஓர் மிடுக்கையும் ஒழுங்கையும் வெளிப்படுத்தும். இந்தக் குழந்தை நிச்சயம் ஓர் உயர்ந்த இடத்தை அடைவாள் என்று சிவகாமியின் உள் மனது கூறும்.
சரசு ரோசா இருவரும் லட்சுமியுடன் சேர்ந்து குதூகலத்துடன் கும்மாளமிட்டனர். இருவரும் இதுவரை கண்டிராத டிபன் வகைகளை ருசி பார்த்தனர். கேப்பங்கூழும் பழைய சாதமும் மட்டுமே அறிந்தவர்களுக்கு சாட் சமாசாரங்கள் புதுமையான ருசியை அறிமுகபடுத்தின.
ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகின. சரசுவை கலியன் இரண்டு நாட்கள் முன்னதாகவே வந்து ஊருக்கு அழைத்துப் போய் விட்டான்.
டீச்சர் எதிர்பார்த்தது போல் சரசு தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட். தலைமை ஆசிரியரும் நீலா டீச்சரும் கலியனின் வீட்டிற்கே வந்து சரசுவை வாழ்த்தினர். “பிஎஸ்சி சேரலாம். குட். நல்ல மார்க்.” என்று வாஞ்சையுடன் கூறினார் ஹெட் மாஸ்டர். கை கட்டி நின்ற கலியன் பதில் உரைத்தான் “அதுக்கெல்லாம் வசதி இல்லிங்கய்யா, டவுன்ல தங்கச்சி பொண்ணும் ப்ளஸ் டூ பாசாயிடுச்சு. அவங்க மாப்ள பாக்கறாங்க, அதுக்கு வேற சீர் செனத்தி செய்யணும்.”
“என்ன கலியா, என்ன அவசரம் தங்கச்சி பொண்ணுக்கு கல்யாணத்துக்கு, வெரசா கட்டி வச்சு பொறுப்ப தீக்கறதுக்கா? நல்லா படிக்கிற புள்ள, ரெண்டு பேத்தையும் மேல படிக்க வையிங்க, கல்வி முக்கியம், கவர்மெண்ட்டு வேல கிடைக்கும், ஆமா, படிப்ப நிறுத்தாதே.” தன்னால் இயன்ற வரை எடுத்துக் கூறிவிட்டுச் சென்றார் ஹெட்மாஸ்டர்.
சிவகாமி தன் கொழுந்தனிடம் மீண்டும் குரலில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டுசொன்னாள். “தம்பி, லட்சுமி மேல படிக்கணும்னு ஆசப்படுது. சரசுவையும் அவளையும் ஒரே காலேஜ்ல சேத்து விட்டா ஒருத்தருக்கொருத்தர் துணையா போவாங்க, படிப்பாங்க” பதிலை எதிர் பாராமல் அவ்விடத்தை விட்டு அகன்றாள். கொழுந்தன் ஆத்திரத்துடன் நாற்காலியை எட்டித் தள்ளினான்.
“அம்மா, அம்மா என்றவாறே மார்க் லிஸ்ட்டுடன் ஓடி வந்தாள் லட்சுமி. 1140 மதிப்பெண்கள். பூரித்தது தாயுள்ளம்.
“அம்மா, மாலினி, ஜெயா, கமலி, கீதா எல்லோரும் ஒரே காலேஜ்ல சேரப் போறாங்க. எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடில்லாம் நிறைய உண்டாம் அந்த காலேஜ்ல, காமர்ஸ் சேர்ந்தா சீஏ கோச்சிங் அவங்களே கொடுப்பாங்களாம், கம்ப்யூட்டர் கோர்ஸ், ஸ்போக்கன் இங்கிலிஷ் அல்லாம் ஃப்ரீ கோர்ஸாம்” விடாமல் பேசிக்கொண்டே போன மகளை கையமர்த்தி நிறுத்தினாள் சிவகாமி. “எல்லாத்துக்கும் ஃபீஸ் நிறைய ஆகும், லட்சுமி.... சரசுவையும் உன்னோடவே சேர்த்து விடணும்னு நினைக்கேன், பாக்கலாம், பொறு”
“அம்மா காலேஜ் அப்ளிகேஷன் ஃபாரம் வாங்கணும், ஆயிரம் ரூபா ஆகும், குடும்மா. பக்கத்து வீட்டு மிலிட்டரி தாத்தா கூட வர்றேன்னு சொன்னாரு. சித்தப்பு ஒரே பிடிவாதமா காசு தர மாட்டேங்குது, எதுக்கு காலேஜ் போவணும்னு கேக்கறாரு, சித்தியும் கூடக்கூட ஏசிப் பேசறாங்க”
பக்கத்து வீட்டு கோவிந்தன் மிலிட்டரியில் இருந்தவர் என்பதும், மனைவியை இழந்தவர்,மகள் திருமணமாகி சிங்கப்பூரில் வாழ்பவர் என்ற தகவல்கள் மாமியார் மரகதம் மூலமாக சிவகாமி காதுக்கு எட்டின.
“நா அப்பாயிய கேட்டு வாங்கித் தாரேன், லட்சுமி.” யோசனையில் ஆழ்ந்தாள் சிவகாமி. கோவிந்தன் அவள் குடும்பத்தில் அக்கறை கொண்டவராக இருந்தாலும் வீட்டு விஷயங்களில் தலையிட மாட்டார். ஆனால் கேட்டால் எந்த உதவியும் செய்யத் தயங்கவும் மாட்டார்.
சிவகாமி மீண்டும் தைரியமாக கொழுந்தனை அணுகி பணம் கேட்டாள். குடித்திருந்தவனின் முகம் ஆக்ரோஷத்தில் ஜிவு ஜிவு என்று சிவந்தது. அருகில் மனைவி வேறு ஊறுகாயுடன் கோபத்தையும் போதையையும் ஏற்றி விட்டுக் கொண்டிருந்தாள். ஏதோ சுமாராக செலவு செய்து அண்ணன் மகளை கட்டிக் கொடுத்து துரத்தி விட்டால் பின்னர் அண்ணியை துரத்துவது சுலபம், சொத்தை இவர்கள் கைக்குள் கொண்டு வந்து விடலாம். கணவன் மனைவி இருவரும் இப்படித்தான் கணக்கு போட்டனர்.
“ பொட்டப் புள்ள படிச்சி கிழிச்சு வேலக்கி போகப் போவுதா? என் ரெண்டு பையனுகளையும் படிக்க வக்க வாண்டாமா? அப்படி என்ன வருமானம், காசு கொட்டுதா இங்க? வானம் பாத்த பூமி, உங்க அண்ணன் பாக்குற மகசூல் கூட நா பாக்கறதில்ல, பய்யனுக கேக்கறத வாங்கித் தரமுடியல, அடகு வச்ச சங்கிலிய திருப்ப முடியல, எம்பொண்டாட்டி கழுத்து மூளியா நிக்கா, உங்க பொண்ண காலேஜ்ல சேக்கணுமா? என் மாமியா உறவுல ஒரு வரன் இருக்கு, கைல கழுத்தில சுமாரா போட்டு கட்டி குடுத்திரலாம்”
“யாரு நீ ஒரு குடிகாரன், இன்னொரு பெருத்த குடிகாரனுக்கு மவளை கட்டிக் குடுக்கறேன்னு சொல்றியே, சித்தப்பனா நீயி? இதுதான் உங்கண்ணனுக்கு நீ கொடுத்த வார்த்தையா? என்ன தம்பி பேசுதிய? சிக்கனமா இருந்தா உம்பொண்டாட்டி கழுத்து ஏன் மூளியா இருக்கு? வயக்காட்ட போயி விவரமா பாக்குறதில்ல, குத்தகை ஆளுங்க சொல்றதை நம்புறது, நானும் அத்தையும் அப்பப்ப போய் பாக்குறதனால தான் இந்த வெளைச்சலாவது கெடைக்குது.”
“அதெல்லாம் முடியாது. காலேஜி சேக்க விட மாட்டேன். என்ன வேணா செஞ்சிக்க”
இதற்கு மேல் பேசினால் நிலைமை விபரீதமாகும் போல் இருந்தது. சிவகாமி மேற்கொண்டு எதுவும் பேசாமல் கண்ணீருடன் தோட்டத்துக்கு சென்று விம்மி அழுதாள். மாமியாரோ ஓர் வாயில்லாப் பூச்சி.
“ஏந்தங்கச்சி அழுவுற?” குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பினாள். கோவிந்தன் ஆதூரமாக முறுவலித்தார்.
“நா எல்லாத்தையும் கேட்டுகிட்டு தான் இருந்தேன். உள்ள வா தங்கச்சி” என்றவரை பின் தொடர்ந்தாள் சிவகாமி.. கோவிந்தன் குவளையில் நீர் முகர்ந்து சிவகாமியிடம் நீட்டினார். “ உக்காரு புள்ள ,முகத்த துடச்சிக்க. துணிச்சலா இரு, உனக்கு ஒரு சேதி சொல்றேன்” கையடக்கமாக இருந்த அலைபேசியை எடுத்து வந்தார். “வாட்ஸ் ஆப் சேதி இது” “அப்படின்னா?” சிவகாமி புரியாமல் கோவிந்தனை நிமிர்ந்து பார்த்தாள்.
“இதுல இண்டர்னெட் இருக்குது. உலகத்து சேதியெல்லாம் இதுல பாக்கலாம்.” வாழ்க்கையில அடிமட்டத்துல இருந்து முன்னுக்கு வந்தவங்க, கை கால் இல்லாதவங்க கூட விளையாட்டுல சாதனை படைச்சிருக்காங்க. ஒலிம்பிக்ஸ்ல போய் மெடல் வாங்குன மாரியப்பன் பத்தி தெரியுமில்ல? ஆறு குழந்தைங்களை விட்டுட்டு அவங்கப்பா ஓடிட்டாரு. ஆயிதான் எல்லாரையும் காப்பாத்தி, மாரியப்பன உலகப் புகழ் பெற வச்சுது. எத்தினி பொம்பளங்க படிச்சோ படிக்காமலோ என்னென்னவோ சாதனையெல்லாம் செய்யுதுங்க. ஏன் எம்பொண்டாட்டியே ஜவான் குழந்தைகளுக்கெல்லாம் பாடம் சொல்லித் தருவா, கை வேலையெல்லாம் கத்துத் தருவா. சாமிக்கு பொறுக்கல, கூப்பிட்டுடுச்சு. நேர்மையும் தெளிவும் தான் தைரியம். வெளிநாட்டுல பொம்பளைங்க 80 வயசு 90 வயசுக்கெல்லாம் காலேஜே போயி படிச்சு பட்டம், பிஹெச்டி டிகிரியெல்லாம் வாங்கறாங்க. துணிச்சலுக்கு ஒரு பயங்கரமான ஆனா நியாயமான உதாரணம் கேளு, ஆஸ்த்ரேலியா நாடு தெரியுமா?”
‘ம்’ என்றாள் சிவகாமி.
“அங்ஙன ஒரு 81 வயசுக் கிழவி, அவ பேத்திய கெடுத்தவன 10 நாள் ஃபாலோ பண்ணி துப்பறிஞ்சு கண்டுபிடிச்சு என்ன செஞ்சா தெரியுமா? கிளீனா துப்பாக்கியால சுட்டுப் போட்டா. நாட்டு சனங்க அத்தனையும் அவ பக்கம், மேயரா ஆக்கணுமாம் அந்தக் கிழவிய. போலிசு இப்ப முழிக்குது. கிழவி, அதனால தண்டனை கொடுக்க முடியல. நீ என்னடான்னா பொண்ண படிக்க வக்க கொழுந்தன் கிட்ட பேசி செயிக்க முடியாதா? நல்லா எடுத்துச் சொல்லு, இல்லாட்டி சொத்தை பிரிச்சுக் கொடுங்கன்னு கேளு”
கோவிந்தன் சிவகாமியின் கண்களுக்கு சாட்சாத் மலைசாமி கோவிந்தனாக காட்சியளித்தார்.
“அய்யா தாங்க்ஸ் அய்யா வரேனுங்க. “ கிளம்புவதற்கு முன் கோவிந்தன் போனிலிருந்து அண்ணனின் பக்கத்து வீட்டிற்கு போன் போட்டு சரசுவையும் ரோசாவையும் மறுநாளே அழைத்து வருமாறு அண்ணனுக்கும் அண்ணிக்கும் அன்புக் கட்டளையிட்டாள்.
சிவகாமியின் நடையில் இப்போது ஓர் புதிய எழுச்சியும் துணிவும் தெரிந்தது.
கல்வி , அறிவை மட்டுமல்ல, ஆக்கம், விழிப்புணர்வு, தெளிவு, பொறுமையை தந்து மடமையை போக்கும் என்பதை கொழுந்தனிடம் எப்படி எடுத்துக் கூறலாம் என்று மிகத் தெளிவாக சிந்தித்து, கனிவான சொற்களை தயார் செய்து கொண்டு தன் வீட்டினுள் காலடி எடுத்து வைத்து புதுமைத் தடம் பதித்தாள்.