Image by AkshayaPatra Foundation from Pixabay 

*வருடம் 1910*.

வசுமதிக்கு கொஞ்சம் படபடப்பாக இருந்தது. அவளுடைய நண்பர்களை இன்னும் காணவில்லை. மச்சு வீட்டு அக்காவிற்கு பிரசவம் பார்க்க சென்றிருக்கும் பாட்டி வருவதற்குள் கொடுக்காப்புளியையும் கொய்யாக் காயையும் சாப்பிட்டு தீர்க்க வேண்டும். ராமு, சேது, முருகன், பாலு இவர்களுக்கெல்லாம் கொடுக்காமல் அவள் சாப்பிட்டதே இல்லை. எல்லாம் இந்த பாட்டியால் வந்தது என்று பாட்டியை கறுவினாள் 9 வயது சிறுமி வசுமதி.

வசுமதிக்கு ஆண்பிள்ளை பசங்களுடன் சேர்ந்துகொண்டு கில்லி தண்டா விளையாடுவது, காட்டுப் பகுதிக்குள் போய்

நெல்லிக்காய், மாங்காய் முதலியவை பறிப்பது, போன்றவைகளில் நாட்டம் அதிகம் இருந்தது.

"வயசுக்கு வர்ற நேரம். பொட்டச்சி, ஆம்பள பசங்களோட சேர்ந்துக்கிட்டு கும்மாளமா போடுற" என்று வசுமதிக்கு அடி விழுந்தது. இந்தியாவே இன்னும் சுதந்திரக் காற்றை சுவாசிக்காத போது வசுமதிக்கு ஏது சுதந்திரம்? சேர்வராயன் மலைத் தொடரின் அடிவாரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்த பாட்டி ஜனகத்திற்கு தாய் தந்தையற்ற வசுமதியை ஒருவன் கையில் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்பதற்கு மேல் ஒன்றும் தெரியவில்லை.

ஆனால் வசுமதிக்கு நிறைய ஆசைகள் இருந்தன. காட்டிற்குள் சென்று ஆண்பிள்ளைகளை போல் வேஷ்டியை வரிந்து கட்டிக்கொண்டு, மரத்தில் ஏறி பையன்கள் தொங்குவது போல் தலைகீழாக தொங்க வேண்டும். முக்கியமாக திண்ணை

பள்ளிக்கூடத்திற்கு சென்று ஆனா ஆவன்னா எல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஆனால் பையன்களுடன் விளையாடுவது தெரிந்தால்

பாட்டி தோலை உரித்து விடுவாள்.

கொடுக்காப்புளி மூட்டையோடு பையன்களை தேட கிளம்பினாள் வசுமதி. ராமுவின் வீட்டில் அவனை "பொம்பளசிறுக்கியோட என்ன விளையாட்டு" என்று திட்டியதால் வசுமதியை இனிமேல் விளையாட்டிற்கு சேர்த்துக் கொள்ள வேண்டாம் என்று அவன் சொல்லிவிட்டான். ராமுதான் கொஞ்சம் பசையுள்ளவன். அவ்வப்போது அதிரசம் முறுக்கு சீடை நண்பர்களுக்கு தருவான். அதனால் முருகன் சேது பாலு மூவரும் அவன் சொல்வதை தான் கேட்டனர். இன்று வசுமதிக்கு தெரியாமலேயே நால்வரும் காட்டுக்குள் ஓடிவிட்டனர். காட்டின் நடுவில் அருவியும் ஏரியும் உண்டு. அருவியில் குளிக்கலாம் என்ற திட்டத்துடன் நான்கு சிறுவர்களும் சென்றுவிட்டனர். சோ என்ற சத்தத்துடன் அருவி கொட்டிக்கொண்டிருந்தது. நால்வரும் அருவியின் அணைப்பில் கிறங்கினர். தலையின் மீது விழுந்த அருவியின் குளிர்ந்த நீர் மத்தளத்துக்கு விழும் அடி போல் சுகமாக இருந்தது.

"போறுண்டா அருவியில குளிச்சது. வாடா ஏரியில நீச்சல் அடிக்கலாம்" ராமுவின் ஆணைக்கு உட்பட்டு மற்ற மூவரும் ஏரியை நோக்கி சென்றனர். ராமு தான்முதலில் ஏரியில் இறங்கினான். மறுகணம் அவனை யாரோ பிடித்து இழுப்பது போல் தோன்றியது. ஏரியின் ஆழத்தில் அவன் அமிழத்தொடங்கினான். "டேய் காப்பாத்துடா" அவனுடைய கூச்சல் எங்கும் எதிரொலித்தது. மறுகணம் எங்கிருந்தோ வந்தான் முறுக்கு மீசையும் குடுமியுமாக ஒருவன். ஏரியில் பாய்ந்து குதித்து ராமுவின் முடியை பிடித்து தூக்கினான். அதற்குள் ராமு நிறைய தண்ணீர் குடித்து விட்டிருந்தான். அவன் வயிற்றை அமுக்கி தண்ணீரை எல்லாம் வெளியேற்றிவிட்டு, மற்ற சிறுவர்களின் அருகில் வந்து அவர்களை ஒரு அறை விட்டான் அந்த குடுமி மனிதன். "எங்கடா வந்தீங்க தனியா? வீட்டுக்கு போங்க. இன்னொரு தடவை வந்தீங்க தோலை உரிச்சுப்புடுவேன்."

அவனுடைய குரலுக்கும் ஆகிருதிக்கும் நடுங்கிப் போய் நான்கு சிறுவர்களும் ஓட்டம் எடுத்தனர் வீட்டை நோக்கி. காட்டிற்குள் போய் ஏரியில் விழுந்தோம் என்று தெரிந்தால் வீட்டில் உதை விழும். மேலும் யார் காப்பாற்றியது என்று கேட்டால் என்ன சொல்வது ? யார் நம்மைக் காப்பாற்றியது? நான்கு சிறுவர்களும் திருதிரு என்று தமக்குள் விழித்தனர். "டேய் அது ஆவி சாமி தாண்டா நம்பள காப்பாத்திச்சு. வீட்ல சொன்னா நம்பவும் மாட்டாங்க, ரொம்ப அடிப்பாங்கடா. ஒருத்தனும் ஒன்னும் சொல்லாதீங்கடா." ராமு ரொம்ப கெஞ்சி கேட்டுக் கொண்டான்.

வசுமதிக்கு தான் வெகு தூரம் நடந்து வந்து விட்டோம் என்று தோன்றியது. வெளிச்சம் லேசாக குறையத் தொடங்கியது. வசுமதிக்கு பயமும் அழுகையும் வந்தது. "சேது முருகா பாலா எங்கடா இருக்கீங்க? " என்று கூவினாள்.

அவள் குரல் தான் எதிரொலித்ததே தவிர யாரும் வரவில்லை. அப்போது "என்ன பாப்பா தனியா காட்டுக்குள்ள வந்திருக்கே?" என்று ஒரு ஆண் குரல் கேட்டது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள் வசுமதி. ஆஜானுபாகுவாக ஒருவன் புன்சிரிப்புடன் நின்றுகொண்டிருந்தான். அவனுடைய கட்டுக்குடுமியும், முறுக்கு மீசையும், நெற்றி நிறைய திருநீறும் வசுமதியின் பிஞ்சு நெஞ்சை ஆட்கொண்டது. "நீங்க சாமியா?" என்று ஆச்சரியத்துடன் வினவினாள். அவனருகில் ஒரு நாய் வேறு நின்று கொண்டிருந்தது. "நாய் கடிக்குமா?" என்று அடுத்த கேள்வியை வீசினாள்.

"நானு சாதாரண ஆசாமி தான். இந்த நாய் குரைக்கும் ஆனா கடிக்காது " என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தான் அவன்.

"ஆமா நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லல. தனியா எங்க வந்த?" முறுக்கு மீசை வசுமதியை வினவினான்.

"என் கூட விளையாடுற பசங்கள தேடி வந்தேன் "

"அவங்களை நான் தான் வீட்டுக்கு போங்கடான்னு அனுப்பி வச்சிட்டேன். இப்ப நீயும் வீட்டுக்கு போ. ஆமா மடியில நிறைய கொடுக்காப்புளி வச்சிருக்க போல இருக்கு"

"வேணுமா தர்ரேன் ஆனா பதிலுக்கு நீ எனக்கு என்ன தருவ? இவ்ளோ பெரியவனா இருக்கியே. எனக்கு பாடம் சொல்லி தரியா?"

வசுமதியை கூர்ந்து நோக்கின அவன் கண்கள்.

"நாளைக்கு வா சொல்லித்தாரேன்"

"என் பேரு வசுமதி உன் பேரு என்ன? "

"உனக்கு புடிச்ச சாமி எது?"

"மாடசாமி "

"அப்ப அதுதான் என் பேரு"

"பின்ன முதல்ல நான் சாமி இல்லன்னு ஏன் சொன்னே."

"சாமி மாதிரின்னு வெச்சுக்கயேன்" என்றான் அவன் மீண்டும் சிரிப்புடன்.

"சரி வசுமதி, ஊருக்குள்ள போய் யாருகிட்டயும் என்னை பாத்ததெல்லாம் சொல்ல கூடாது. மீறி சொன்னேன்னா இந்த நாயை விட்டு கடிக்க வச்சிடுவேன்."

"சொல்லமாட்டேன் இந்தா கொடுக்காப்புளி வச்சிக்க."

அவனை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே கிளம்பினாள் வசுமதி.

வசுமதி மாடசாமியையும் அந்த நாயையுமே நினைத்துக் கொண்டிருந்தாள். மறுநாள் போகும்பொழுது நாயை ஒரு முறை தொட்டு பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

மறுநாள் பாட்டி ஏதோ பரபரப்பாக இருந்தாள். பக்கத்துத் தெரு அடுத்த தெருவில் இருந்து வந்திருந்த செல்லாயி மூக்காயி தனலட்சுமி எல்லோரும் கூடிக் கூடி ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். " சுட்டு போட்டுட்டாங்களாம்" என்ற வார்த்தை அடிக்கடி காதில் விழுந்தது வசுமதிக்கு.

"என்ன பாட்டி? "

"நம்ம ஊரு பெரிய தேவரய்யாவை பரங்கி சிப்பாய்காரங்க, கேட்ட பணத்தை குடுக்கலன்னு நேத்து இழுத்துட்டு போயிட்டாங்களாம். சின்ன தேவரு எங்கேயோ ஓடி போயிட்டாராம்."

வசுமதிக்குப் புரிந்தது போல இருந்தது. பாட்டி அசந்த நேரம் பார்த்து காட்டுப்பக்கம் ஓடினாள்.

அவளுக்காக சில புத்தகங்களுடன் காத்திருந்தான் மாடசாமி. அவன் பேசுவதையெல்லாம் ஆவென்று ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டிருந்தாள் வசுமதி. இங்கிலீஷ் எழுத்துக்கள் தமிழ் செய்யுள்கள், திருக்குறள், ஆத்திச்சூடி கொன்றைவேந்தன் ஆகியவற்றுடன் ஐக்கியமானாள் வசுமதி. . உலகநீதியே சிறந்த வழிகாட்டியாக அமைந்தது அவளுக்கு. நாட்கள் வேகமாக கழிந்தன.

"உங்கள நான் அப்பான்னு கூப்பிடலாமா?" என்று ஒருநாள் வசுமதி கேட்டாள் அவனிடம்.

கண்களில் கண்ணீருடன் "கூப்பிடு தாயி, என்னைய நைனான்னு கூப்பிடு". என்றான் அவனும்.

அன்றுதான் தந்தையும் மகளும் சந்தித்த கடைசி நாள். பெரிய மனுஷியான பிறகு வசுமதி வெளியே செல்வது தடைப்பட்டு விட்டது. எப்போதாவது பண்ணையார் வீட்டிற்கு சென்று அவர் மனைவிக்கு உதவியாக சில வேலைகள் செய்து கொடுத்து விட்டு வருவாள். மற்ற சமயங்களில் தான் கற்றுக் கொண்டதை எழுதிப் பார்ப்பதும், மனனம் செய்வதுமே அவளுடைய ஒரே பொழுது போக்காக இருந்தது.

பண்ணையாருக்கு மருத்துவம் பார்க்க வந்த பட்டணத்து வைத்தியர் சோமசேகர் வசுமதியின் சுறுசுறுப்பையும் துடிப்பான பேச்சையும் பார்த்தும், கேட்டும் அசந்து போனார். டாக்டருக்கு படித்திருக்கும் தன் மகனுக்கு இவளை போல் ஒரு படித்த பெண்தான் வேண்டும் என்று நிச்சயித்து கோலாகலமாக வசுமதியை தன் மருமகள் ஆக்கிக் கொண்டார்.

மனைவியை இழந்த சோம சேகருக்கு வசுமதி மகளாகவும் ஆனாள். கிராமத்தில் பிறந்து வளர்ந்தவளாக இருந்தாலும் வசுமதி சடுதியில் பட்டணத்து பழக்கவழக்கங்களை கற்றுக் கொண்டாள். கணவன் ராஜனின் முக குறிப்பை பார்த்தே அவனின் தேவைகளை நிறைவேற்றுவதில் வல்லவளாக இருந்தாள். வீட்டில் வேலைக்காரர்கள் பலர் இருந்தாலும் சமையல் மற்றும் பல பணிகளை தானே செய்வதில் அதிகம் உவகையுற்றாள்.

கல்வி கற்க வேண்டும் என்ற தன் பேராசையை மாமனார் சோமசேகரிடம் மிகவும் தயக்கத்துடன் வெளிப்படுத்திய போது சோமசேகர் மிகவும் மகிழ்ச்சியுடன் அவளுக்கென்று ஒரு ஆசிரியரை வீட்டிலேயே நியமித்தார்.

அக்கால வழக்கப்படி ஆசிரியருக்கும் வசுமதிக்கும் இடையே ஒரு திரை தொங்க விடப்பட்டு பாடங்கள் தொடங்கின. அந்த வீட்டிலேயே தண்டச்சோறு சாப்பிட்டு கொண்டிருந்த சோம சேகரின் சில உறவினர்களுக்கு இது பிடிக்கவில்லை.

"அடுப்பூதும் பெண்ணிற்கு படிப்பெதற்கு? " என்பது பத்தாம்பசலிக் கொள்கை என்று சோமசேகர் முழங்கிய போது அவருடைய சகோதரி மற்றும் பல பெரியவர்கள் முகம் சுளித்தனர்.

வசுமதியை படிக்க விடாமல் செய்வதற்கு என்னென்ன உபாயங்கள் உண்டோ அவ்வளவும் அவ்வீட்டில் செய்யப்பட்டன. வசுமதிக்கு மாமியார் இல்லாத குறையை மற்றவர்கள் தீர்த்து வைத்தனர். ஓயாமல் நோயாளிகளுக்காக இலவச வைத்தியம் பார்க்கும் கணவரிடமும் மிகவும் அன்பான மாமனாரிடமும் எந்தக் குறையையும் சொல்லாமல் தன் பிரச்சனைகளை எப்படி தீர்த்துக் கொள்வது என்று வசுமதி சாதுர்யமாக யோசித்தாள். இந்த சமயத்தில்தான் தாய்மையுற்றாள் அவள். வசுமதியின் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது.

மாமனார் ஓய்வாக இருக்கும் சமயம் பார்த்து மெல்ல அவர் காலடியில் சென்று அமர்ந்தாள். மாமனாருடன் பேசுவதோ, அவருக்கு எதிரில் அமர்வதோ கூடாது என்று பாட்டியே அவளிடம் சொல்லி அனுப்பி இருந்தாள். அதனால் அவசியம் இருந்தாலொழிய அவள் மாமனாருடன் வந்து அதிகம் பேச மாட்டாள். சோமசேகர் தான் அவளை வசும்மா என்று வாயார அழைத்து ஏதாவது கேட்பார். இன்று காலடியில் அவள் வந்து அமர்ந்தவுடன் சோமசேகர் வாஞ்சையுடன் அவளை "என்னம்மா?" என்று கேட்டார்.

"பாட்டியை பாக்கணும் போல இருக்கு அப்பா" என்றாள் அவள்.

தாயில்லா குழந்தையின் மனம் சோமசேகருக்கு புரிந்தது. அவர் ஒரு முடிவுக்கு வந்தார். பட்டணத்து சௌகரியம் கிராமத்தில் இருக்காது. வசுமதியை கிராமத்திற்கு அனுப்ப அவர் மனம் ஒப்பவில்லை. கிராமத்திற்கு ஆள் அனுப்பி பாட்டியை சென்னை பட்டணத்திற்கு வரவழைத்து விட்டார்.

"பாட்டி ஏன் கிராமத்தில் தனியாக இருக்கணும்? இங்கே நம்முடனே இருக்கட்டும்." அவர் குரலின் ஆணித்தரம் மற்றவர்களை வாயடைக்க செய்து விட்டது.

அதன் பிறகு வசுமதிக்கு எதற்கும் கவலைப்பட நேரமும் இல்லை, அவசியமும் ஏற்படவில்லை. பாட்டியின் பக்க பலத்தினால் தான் செய்ய நினைத்த பல செயல்களை துணிவுடன் செய்தாள். தன் படித்து கற்ற பாடங்களை அக்கம் பக்கத்தில் இருக்கும் பெண்மணிகளுக்கு சொல்லிக் கொடுத்தாள். சுதேசி இயக்கமும் சுதந்திரப் போராட்டங்களும் வலுப்பெற்றுக் கொண்டிருந்த நேரம் அது. அவற்றில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு கதராடையை அணிந்து எளிமையின் சின்னமாக விளங்கினாள் வசுமதி. நான்கு மக்களையும் பெற்று மிக நல்ல தாயாகவும் விளங்கினாள். வசுமதியின் மனதில் அவளுக்கு முதன் முதலில் பாடம் சொல்லிக் கொடுத்த மாடசாமியின் உருவம் நீங்காத இடம் பெற்றிருந்தது. மாடசாமிதான் சின்ன தேவரா என்ற சந்தேகம் அவள் மனதில் அவ்வப்போது தலை தூக்கும். பாட்டியிடம் கேட்கவும் துணிவில்லை. எங்கேயோ ஓடிப்போன தேவர் திரும்பி வந்தாரா இல்லையா என்பதை சொல்லாமலேயே பாட்டியின் காலம் முடிந்து விட்டது. மாடசாமியின் உருவத்தை காகிதத்தில் பெரியதாக வரைந்து இவர் தான் நம் குலசாமி என்று தன் மக்களிடம் சொல்லி வைத்தாள் வசுமதி. வீட்டிலிருந்த பல உறவினர்களின் காலமும் முடிந்து விட்டது. மாமனாரின் முதுமை காலத்தில் அவரை மிகவும் அன்புடனும் அக்கறையுடனும் கவனித்து அவரை கரையேற்றினாள் வசுமதி. நாடு சுதந்திரம் பெற்றது. பொது சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டாள் வசுமதி.

வருடம் 1960 :

பிரசிடென்சி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த வசுமதியின் கடைசி மகன் ஒரு நாள் தன் தோழனை வீட்டிற்கு அழைத்து வந்தான். அவனைப் பார்த்து வசுமதி பிரமித்து போனாள். மாடசாமியின் மறு உருவமாக விளங்கினான் அந்த இளைஞன்.

 "அம்மா நம்ம குலசாமின்னு சொல்லுவியே, அந்த சின்ன தேவருடைய பேரனாம் இவரு." தன் உடன்பிறவாத அண்ணனின் மகனை அரவணைத்தாள் வசுமதி. புதிரின் முடிச்சு அவிழ்ந்தது.

.     .    .

Discus