Image by Josiane Boute from Pixabay 

ஈ, எறும்பு, பூனை, நாய் எல்லாமே ஜீவராசிகள் தான். மனிதர்களின் உயிரைப் போலவே மிருகங்களின் உயிரும் மதிப்புமிக்கது. மிருகங்களை வளர்ப்பதற்கும் பாதுகாப்பதற்கும் நிறைய வழிமுறைகள் உள்ளன. என்னுடைய சிறு வயதில் நடந்த ஒரு சம்பவத்தை நான் கூற விரும்புகிறேன். எனக்கு ஐந்து வயது இருக்கும் பொழுது மழைத் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு கட்டெறும்பை காப்பாற்றுவதற்காக நான் விரலால் அதை எடுக்க கட்டெறும்பு நன்றாக என்னை கடித்து விட்டது. குச்சியால் அதை காப்பாற்றியிருக்க வேண்டும் என்று எனக்கு அப்போது தெரியவில்லை. மற்ற உயிர்கள் மீது உள்ள ஓர் இரக்க உணர்ச்சி எனக்கு அப்போதே ஏற்படத் தொடங்கிவிட்டது. இதற்கு சில நாட்களுக்குப் பிறகு தெருவில் பசியால் வாடிக் கொண்டிருந்த ஒரு நாய் குட்டியை நான் வீட்டிற்கு தூக்கிக்கொண்டு வந்து விட்டேன். பிறகு எங்கள் வீட்டிலேயே வளர்ந்தது அந்த நாய்க்குட்டி. என் தந்தை தனது 90 வயது வரை எப்போதும் தெருநாய்களுக்கு பிஸ்கட் பன் ரஸ்க் முதலியவைகளை வாங்கிப் போடுவார்.

செல்லப்பிராணிகள் வளர்ப்பு என்பது ஆதிகாலம் தொட்டே இருந்து வருகிறது. ராஜா மகாராஜாக்கள் காலத்தில் யானைகள் குதிரைகள் புலி சிங்கம் வேட்டை நாய்கள் முதலியவை செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டன. நாய் பூனை ஏன் பாம்புகளை கூட செல்லப்பிராணிகளாக இன்னமும் பலர் வளர்த்து வருகிறார்கள்.

விலங்குகளின் உரிமைகள் என்ன.?

விலங்குகள் தம்மை வளர்ப்பவர்களிடம் அன்பு ஒன்றையே எதிர்பார்க்கின்றன. ரொட்டி துண்டுக்கு வாலாட்டும் நாயும், பாலுக்காக நம் கால்களை உரசும் பூனையும் எதை எதிர்பார்க்கின்றன? அன்பு ஒன்றையே. அதுதான் அவர்களின் உரிமை.

மிருகங்களை நாம் ஏன் காப்பாற்ற வேண்டும் எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம். மிருகங்கள் வாயில்லா ஜீவன்கள். மிருகங்கள் ஒரு நாட்டின் வளம். ஆடு மாடு போன்ற மிருகங்களால் மனிதனுக்கு பல நன்மைகள் விளைகின்றன. அதை மனதில் கொண்டு பலர் மிருகங்களை பாதுகாக்கும் புனிதமான காரியத்தை செய்து வருகின்றனர். நன்றாக படிக்காத மாணவர்களை ஆசிரியரும் பெற்றோர்களும் 'நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு' என்று திட்டுவார்கள். ஆனால் ஆடு மாடு மேய்ப்பது அவ்வளவு சுலபமான வேலை இல்லை. மந்தையில் இருந்து ஆடுகள் விலகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேய்ச்சலுக்குப் போகும் போது பிற வன விலங்குகளால் ஆடு மாடுகளுக்கு இடையூறு ஏற்படக்கூடும். இப்படிப்பட்ட அபாயங்களிலிருந்து ஆடு மாடுகளை பாதுகாக்கும் பொறுப்பு இடையனுக்கு இருக்கிறது.

ஒரு சிலர் எப்படி மிருகங்களை இரட்சிக்கும் பொறுப்பை ஏற்று இருக்கிறார்கள் என்பதை நாம் இப்போது பார்ப்போம்.

கௌஹர் அஜீஸ் என்ற இஸ்லாமிய பெண்மணி 2014ல் இருந்து அடிமாட்டுக்கு இறைச்சிக்காக கொண்டு செல்லும் மாடுகளை தடுத்து நிறுத்தி போராடி வருகிறார். சென்னையை சேர்ந்தவர் 2000 கால்நடைகளை காப்பாற்றி உயிர் தந்திருக்கிறார். பிறப்பால் இஸ்லாமியராக இருந்தாலும் இறைச்சிக்காக கொண்டு செல்லப்படும் மாடுகளை தடுத்து நிறுத்தி வழக்குத் தொடர்ந்து கோர்ட் கேஸ் என அலைந்து அந்த மாடுகளை அந்தந்த கோ சாலைகளுக்கு அனுப்பி வைப்பதை ஓர் புனிதப் பணியாக செய்து வருகிறார். கௌஹர் அஜீஸின் இந்த சேவை மனப்பான்மை மிகவும் போற்றுதலுக்கு உரியது. கௌஹர் அஜீஸ் கூறுகிறார். " பகவான் கிருஷ்ணர் மாடு மேய்த்தார், இயேசு மாட்டு தொழுவத்தில் தான் பிறந்தார், நபிகளும் ஒட்டகம் மேய்த்தவர். மதங்கள் யாவற்றிலும் வணங்கப்படும் கடவுள்கள் ஏதோ ஒரு வகையில் பிராணிகள் லோடு தொடர்புடையவர்களாக இருந்திருக்கிறார்கள். அதனால்தான் இவர்களிடம் அன்பு கருணை ஞானம் நேர்மை இருந்தது. மதங்கள் யாவுமே ஜீவகாருண்யத்தை தான் போதிக்கின்றன. கால்நடைகளை காப்பாற்றுவதையே என் குறிக்கோளாக வைத்திருக்கிறேன்."

இந்திய சமுதாயம் விவசாயம் சார்ந்தது. அதற்கு கால்நடைகள் அவசியம். கால்நடைகளை இழந்துவிட்ட ஒரு தேசத்தினால் முன்னேற்றம் அடைய முடியாது. கௌஹர் அஜீஸை பின்பற்றி பலர் கோவில்களுக்கு தானமாக கொடுக்கப்பட்ட பசு மாடுகளை பராமரிக்க வளர்க்க முடியாத சூழ்நிலையில் அவை இறைச்சிக்காக அனுப்புவதாக தகவல் வந்தால் அப்படிப்பட்ட பசுக்களை போலீஸ் துணையுடன் சென்று காப்பாற்றி விடுகின்றனர்.

பசுவை நாம் மகாலட்சுமியாக கருதுகிறோம். சாணம் கோமியம் இவை எரிபொருளாகவும் மின்சாரம் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. நல்ல வெயிலில் மேய்கின்ற மாடுகள் தன்னுள்ளே சூரியனின் வெப்பத்தை கிரகித்துக் கொள்கின்றன. அப்படிப்பட்ட மாட்டின் பாலை அருந்துபவர்கள் மிகவும் ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.

ஆண்டனி ரூபின் 11ஆம் வகுப்பு படிக்கும்போதே தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து மிருகங்களின் நலனில் தன் கவனத்தை செலுத்தத் தொடங்கினார். அவருடைய குழு அதிகமாக சுமை ஏற்றப்பட்ட மாட்டு வண்டி, சட்டத்திற்குப் புறம்பாக கால்நடைகளை கடத்தும் லாரிகள் இவற்றை குறி வைத்து பிடித்தனர். சர்க்கஸில் சிங்கங்கள் புலிகள் குரங்குகளின் பயன்பாடு தடை செய்யப்பட்ட பிறகும் அவைகள் வேறுவிதமாக துன்புறுத்தப்படுவதாக செய்தி அறிந்ததும் ஆண்டனி களத்தில் இறங்கினார் . நான்கு சிங்கங்கள் விருதுநகரில் ஒரு துருப்பிடித்த கூண்டுக்குள் அடைக்கப்பட்டு சைவ உணவும் மிருகக் கொழுப்பும் கொடுக்கப்பட்டதாக அவர் அறிந்தார். ஆண்டனியின் விடாமுயற்சியினால் சிங்கங்கள் வண்டலூர் ரெஸ்கியூ சென்டருக்கு அனுப்பப்பட்டன. இதேபோல் மக்களை மகிழ்விப்பதற்காக வளர்க்கப்படும் சிம்பான்சி குரங்குகளும் நிறைய குதிரைகளும் மெரினா கடற்கரையிலிருந்து காப்பாற்றப்பட்டன. அந்த மிருகங்கள் மிகவும் கொடுமையான நிலைமையில், முறையான உணவு ஆகாரமின்றி வைக்கப்பட்டிருந்தன. ஒரு குதிரை ஆண்டனியின் கண்முன்னே உயிர் விட்டது. இதேபோல் அறியவகை மயில்கள், வீடுகளில் நாகரீகத்திற்காக வளர்க்கப்படும் சிறுத்தைகள் முதலியவை ஆண்டனியால் காப்பாற்றப்பட்டனர். இதற்கான மிரட்டல்களை ஆண்டனி நிறையவே சந்திக்க நேர்ந்தது. ஆனால் ஆண்டனி சோர்ந்து போகவில்லை. சமீபத்தில் 40 நாட்களின் தேடலுக்குப் பின்பு கண்டுபிடிக்கப்பட்ட கோல்டன் ரெட்ரீவர் நாயை குடும்பத்துடன் சேர்த்து வைத்த பெருமை ஆண்டனியை சாரும். நிதியமைச்சர் அதற்காக ஆண்டனியை சோஷியல் மீடியாவில் நன்றி கூறி பாராட்டினார்.

2017ல் சரத்குமார் என்ற காட்டிலாகா அதிகாரி செய்த காரியம் அசாதாரணமானது, மிகவும் துணிச்சல் மிக்கது, போற்றுதலுக்குரியது. அப்படி என்ன செய்துவிட்டார் அவர்?

பள்ளத்தில் விழுந்து விட்ட ஒரு யானையின் குட்டியை அதனுடைய தாயுடன் அவர் சேர்த்துவிட்டார்.

எப்படி? பள்ளத்தில் விழுந்த யானை குட்டியை அவர் தன் தோளில் தூக்கிக் கொண்டு மறுபக்கம் பிளிறிக் கொண்டும், கதறிக் கொண்டும் இருந்த தாய் யானையிடம் சென்று சேர்ப்பித்தார். யானை குட்டியாக இருந்தாலும் மனிதனைவிட பல மடங்கு எடை அதிகம். எப்படி தூக்கினார் அவர்? " என் மனிதாபிமானம் க்ஷண நேரத்தில் யானை குட்டியை தூக்கச் செய்தது. தாயும் குட்டியும் சேர வேண்டுமென்ற என்னுடைய ஒரே எண்ணம் தான் இந்த செயலை செய்ய வைத்தது. லோக்கல் டிவி சேனல்களிலும் சோசியல் மீடியாக்களிலும் சரத்குமார் யானைகுட்டியை தூக்கிக்கொண்டு ஓடும் புகைப்படம் வெளியானவுடன் பலரும் அவரை வாழ்த்தினார்கள். பிபிசி தொலைக்காட்சி அவரைப் பேட்டி கண்டு பெருமைப்படுத்தியது.

"பேலன்ஸ் தவறி விடுமோ என்று பயந்தேன். ஆனால் என் நண்பர்கள் யானைகுட்டியை சரியான முறையில் என் தோளில் பொருத்தி அதை நான் நல்ல முறையில் தூக்குவதற்கு உதவி செய்தனர்." என்றார் பழனிச்சாமி சரத்குமார்.

நவம்பர் 2021ல் தன்னார்வத் தொண்டர்கள் பலர் பெரு மழையினால் ஏற்பட்ட சென்னை வெள்ளத்தில் சிக்கிய மனிதர்களை மட்டுமில்லாமல் பல கால்நடைகள் நாய் பூனை போன்றவைகளையும் மீட்டனர்.

அமெரிக்க கலிபோர்னியா மாகாணத்தில் பால்மர்ஃபி என்பவர் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது ஒரு வீட்டில் இருந்து புகை வருவதை பார்த்து இருக்கிறார். உடனே அந்த வீட்டிற்குச் சென்று ரிங்டோர் பெல் கேமரா மூலம் வெளியூர் சென்றிருந்த வீட்டின் சொந்தக்காரருக்கு அறிவித்திருக்கிறார். வீட்டின் உரிமையாளர் உடனே வீட்டின் உள்ளே செல்லக்கூடிய கோட் வழியை கூறியிருக்கிறார். பால் உள்ளே சென்று அங்கிருந்த செல்லப்பிராணிகளை நெருப்பில் இருந்து காப்பாற்றி இருக்கிறார். சிறிது தாமதித்து இருந்தாலும் விபரீதம் விளைந்திருக்கும்.

மிருகங்களையும் கால்நடைகளையும் காப்பாற்றுவது ஒரு மனிதனின் பொறுப்பு. யானைகள் குதிரைகள் பசுக்கள் நமது நாட்டின் வளம் மிக்க செல்வங்கள். வாயில்லாத ஜீவன்களை வதைப்பது என்பது மிகவும் கொடூரமான செயல். நமக்கு நாமே தீங்கு விளைவிப்போமா? நம் கண்களை நாமே குத்திக் கொள்வோமா ? இந்தக் கேள்வியை ஒவ்வொரு மனிதனும் தனக்கு தானே கேட்டுக் கொண்டால் மிருகவதை செய்யமாட்டான்.

இந்த பூமியில் மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பே மிருகங்கள் தோன்றிவிட்டன. நிறைய மிருக இனங்கள் அழிந்து போய்விட்டன. மேலும் சில அழிந்து போய்விடக்கூடிய நிலையில் இருக்கின்றன. அலுங்கு, உடும்பு போன்ற மிருக இனங்கள் கண்ணில் படுவதே இல்லை. ப்ளூகிராஸ், எஸ் பி சி ஏ போன்ற நிறுவனங்கள் மிருகங்களை காப்பதிலும் மிருக வதையை தடுப்பதிலும் மிகவும் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றனர். லட்சக்கணக்கான தெரு நாய்களும் பூனைகளும் உலவுகின்றன. ஒவ்வொருவரும் ஒரு பிராணியை தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்று ப்ளூ கிராஸ் சொசைட்டியினர் வேண்டுகோள் விடுக்கின்றனர். தெருநாய்களினால் வியாதிகள் பரவும் அபாயமும் உள்ளது. குடிமக்கள் அனைவருமே பிராணிகளை காப்பது பராமரிப்பது போன்ற பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டால் பலவித நன்மைகள் அதனால் விளையும் என்பது திண்ணம்.

அருணாச்சல பிராணிகள் சரணாலயம் மற்றும் பாதுகாப்பு நிலையம் என்ற அமைப்பு பிராணிகளின் நலனுக்காகவே செயல்படுகிறது. "இதயத்துடன் கூடிய கூரை" என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு மிகவும் சிரத்தையுடன் இருக்கும் 25 பணியாளர்கள் மற்றும் மூன்று வெட்ரினரி டாக்டர்களால் நடத்தப்படுகிறது. பிராணிகளும் மிருகங்களோ இங்கே பிடித்து வைக்கப் படுவதில்லை. அவைகளுக்கு ஒரு வாழ்க்கை கொடுக்கப்படுகிறது. இங்குள்ளவர்கள் கூறுவது இதுதான்.

" எங்கள் காப்பகத்தில் அடைக்கலமாகி இருக்கும் நாய்களும் நாய் குட்டிகளும் மிகவும் சந்தோஷத்துடன் வாழ்கின்றன. அந்தப் பிராணிகளின் உடலில் இருக்கும் காயங்களோ ரணங்களோ மிகவும் நன்றாக ஆறுவதற்கு காரணம் அவை தங்களை மிகவும் அன்பாகவும் பாதுகாப்பாகவும் உணர்கின்றன. நம்மைப் பார்த்துக் கொள்வதற்கு ஒருவர் இருக்கிறார் என்ற எண்ணமே அந்தப் பிராணிகளை குணப்படுத்தி விடுகின்றன" என்கின்றனர் காப்பகத்தின் அமைப்பாளர்கள்.

"நாங்கள் மிகவும் பாரம்பரிய முறையிலான மருந்துகளையும் மிக முக்கியமானது அன்பையும் செலுத்தி சுமார் 7000 நாய்களையும் நாய்க்குட்டி களையும் காப்பாற்றி இருக்கிறோம் " அவர்களின் குரலில் ஒலிப்பது பெருமிதம் என்றால் அது மிகையில்லை.

ஜனவரி 2007ல் இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட பொழுது மிருக வைத்தியர் யாரும் கிடைக்கவில்லை. நாய்கள் சொறிசிரங்குகளால் மிகவும் வேதனைப்பட்டு வந்தன. நாய்கள் மட்டுமில்லாமல் பசுக்கள் குரங்குகள் அணில்கள் மயில்கள் இவைகளும் தான்.

அன்பு அன்பு அன்பு இது ஒன்றே இதற்குத் தீர்வு. ஏழு இடங்களில் ஆஸ்பத்திரி அமைக்கப்பட்டது. சரணாலயம் ஏற்படுத்தப்பட்டது. ரேபிஸ் எனப்படும் வியாதி பிராணிகளில் இருந்து அறவே நீங்கியது. மக்களுக்கும் தெருநாய்களை பற்றிய விழிப்புணர்வு பலவாறாக ஏற்படுத்தப்பட்டது. இன்று பல இடங்களில் பலரும் தெரு நாய்களுக்கும் பூனைகளுக்கும் உணவிடுவதை நாம் பார்க்கிறோம். Shelter with heart அமைப்பாளர்களால் வீடற்ற தெரு நாய்களுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு உறவு பாலத்தை ஏற்படுத்த முடிந்தது என்பது ஓர் நிகரற்ற சாதனை. தெரு நாய்களை அருவருப்புடன் பார்ப்பதையும், அவற்றை சிறுவர்கள் கல்லால் அடிப்பதையும் தடுத்ததில் இவர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். மக்களுக்கு அந்தப் புரிதல் ஏற்பட்டதினால்தான் கடுமையான சட்டங்கள், மிருகங்களுக்கு கிளினிக்குகள் ஆஸ்பத்திரிகள், தங்குமிடங்கள் ஏற்படுத்துவது சுலபமானது. இல்லாவிட்டால் அந்தப் பிராணிகள் தண்ணீருக்கும் சாப்பாட்டிற்கும் அலைந்து குப்பைகளில் படுத்துக்கொண்டு உடலில் பல வியாதிகளை வரவழைத்துக்கொண்டு விடும். தெரு நாய் அதுவும் சொறி நாயை யாரும் விரும்ப மாட்டார்கள்.

தடைசெய்யப்பட்ட காட்டிற்குள் சென்று வன விலங்குகளை துன்புறுத்துதல் அறவே கூடாது. பல வருடங்களுக்கு முன்பு கரடிகளை பிடித்து வைத்துக் கொண்டு வேடிக்கை காட்டுவார்கள். அதேபோல் குரங்கை வைத்துக் கொண்டு வேடிக்கை காட்டுவதும் உண்டு. கடுமையான சட்ட திட்டங்களால் அவை இப்பொழுது அறவே தடை செய்யப்பட்டு விட்டன. சர்க்கஸ்களிலும் விலங்குகளை துன்புறுத்துவது இல்லை.

விலங்குகளின் மீது அஹிம்சை மற்றும் பரிவு காட்ட வேண்டும் என்றுகூறும் பல மத மரபுகளின்தாயகமாக இந்தியா உள்ளது. 1960ஆம் ஆண்டு விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டது. எந்த ஒரு விலங்குக்கும் தேவையற்ற வலி அல்லது துன்பம் ஏற்படுத்துவது சட்டத்திற்குப் புறம்பானது ஆகும். விலங்கு நலனில் அக்கறை கொண்டதன் காரணமாக சின்சில்லா, மிங்க், நரி போன்ற விலங்குகளின் உரோமங்கள் மற்றும் தோல்கள் இறக்குமதி செய்வதை 2017இல் இந்தியா தடை செய்தது. 2014-ல் பாரம்பரிய கலைகளை வளர்க்கும் விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. ஆனால் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் எழுந்ததால் அரசாங்கம் ஒரு சட்டத்தின் மூலம் மாநில அளவில் விளையாட்டை மீண்டும் அறிமுகப்படுத்தியது. 2017 இல் இருந்து இந்தியாவில் 18 மாநிலங்களில் பசுவதை சட்ட விரோதம் ஆக்கப்பட்டது. வன விலங்குகளையும் நாம் காப்பாற்ற வேண்டும். காட்டு விலங்குகளை வேட்டையாடுவதும் அதன்மூலம் ஆபத்துகளை எதிர் கொள்வதும் மிகப்பெரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இறுதியாக மிருகங்களும் செல்லப் பிராணிகளும் நமது செல்வங்கள். அவற்றை நாம் நம் கண்ணின் கருமணி போல் பாதுகாக்க வேண்டும். 

.     .     .

Discus