Photo by Rhalf Ryan Gejon on Pexels

பல நாட்டு மக்களிடையே பலவிதமான பழக்கங்கள் நம்பிக்கைகள் நிலவுகின்றன. அவற்றை ஒருபோதும் தவறு என்று நாம் சொல்ல முடியாது. Be a Roman when you are in Rome என்பது மிக அழகான ஒரு பழமொழி. ஒரு தேசத்திற்கு நாம் செல்லும்போது அந்த தேசத்தின் பழக்கவழக்கங்களை சட்டதிட்டங்களை பின்பற்றுவது தானே நல்லது. ஒருவருக்கு சாதாரணமாக இயல்பாக தோன்றக் கூடிய சில விஷயங்கள் மற்றவருக்கு முறைகேடாக தோன்றலாம்.. இதைத்தான் ஆங்கிலத்தில் டாபூ(Taboo) என்று சொல்கிறார்கள் சில நாடுகளில் நிலவும் டாபூ எனப்படும் கட்டுப்பாடுகளை பார்ப்போம்.

இத்தாலி ஒரு அழகான நாடு, கலைகளுக்கும் சீஸ் எனப்படும் பாலாடைக்கட்டிகளுக்கும் பெயர் போன நாடு. நீங்கள் அங்கே உணவகத்தில் உணவு அருந்தும் பொழுது உங்கள் பீட்சாவிற்காக அதிகப்படியான சீஸ் கேட்டீர்களானால் தரப்படமாட்டாது. ஏனென்றால் சீஸ் அங்கு இலவசமும் அல்ல, அதைக் கேட்பது பாராட்டப்படவேண்டிய விஷயமும் அல்ல.. எக்ஸ்ட்ரா சீஸ் கேட்டால் சமையற்காரர் பண்டத்தை நல்லமுறையில் சமைக்கவில்லை என்று பொருளாம் இத்தாலியில். அங்கு சமையல்காரர் செய்வது சொல்வதே சரி. அதற்கு மறுபேச்சு கிடையாது.

நாம் ஒரு புதிய மொழியை கற்கும் பொழுது அதிலுள்ள உச்சரிப்புகளை சரியான முறையில் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சொற்களின் அர்த்தங்கள் மாறிப்போய் வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். சீன தேசத்தில் 4 என்ற எண்ணை எங்குமே பார்க்க முடியாது. நான்கு என்ற எண்ணின் உச்சரிப்பு இறப்பு என்ற சொல்லின் உச்சரிப்போடு ஒத்துப் போகிறதாம் சீன மொழியில். அதனால் 4 14 24 40 போன்ற எண்களுக்கும் சீன தேசத்தவர்களின் வாழ்க்கையில் இடம் இல்லை. வினோதமாக இருக்கிறது அல்லவா !!!

டாபூ என்பது ஒரு சமுதாய கட்டுப்பாட்டின் கோட்பாடு எனலாம். ரஷ்யர்கள் மற்றவர்களுக்கு அன்பளிப்பாக தரும் பூங்கொத்தில் மலர்களின் எண்ணிக்கை ஒற்றைப்படையில் இருக்க வேண்டும். இரட்டைப் படையில் இருந்தால் அபசகுனமாம். ஈமக்காரியங்களுக்கு மட்டும்தான் பயன்படுமாம். பிரான்சில் பகெட் எனப்படும் ரொட்டித் துண்டை கவிழ்த்து வைக்க மாட்டார்கள். கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தால் அவை அரச கட்டளையை ஏற்று தூக்கு தண்டனையை நிறைவேற்றுபவர்களுக்கானதாகும். மற்ற வாடிக்கையாளர்கள் புரிந்துகொண்டு கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும் ரொட்டியை தொடமாட்டார்கள். தற்காலத்தில் கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும் ரொட்டி துரதிர்ஷ்டத்தை கொண்டு வருவதாகவும் நம்பப்படுகிறது. இதற்கு இன்னொரு பக்கமும் உண்டு. ரொட்டி விற்பனையாளர்கள் தூக்கு தண்டனையை நிறைவேற்றி விட்டு வரும் அதிகாரிகளின் வரவை விரும்பாததால் அவர்களுக்கு என்றே கெட்டுப்போன மற்றும் பழசாகிப் போன ரொட்டிகளையும் வைப்பார்களாம்.

மலேசியாவில் ஒருவரின் தலையை தொடுவது என்பது மிகவும் அநாகரீகமாகவும் மரியாதை குறைவாகவும் கருதப்படுகிறது. தலையில் தான் ஆன்மா இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். அதேபோல் கௌதம புத்தரின் தலையை தொடுவதும் மிகவும் தவறாக கருதப்படுகிறது.

Taboo எனப்படும் கட்டுப்பாடுகள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மதம் கலாச்சாரம் மற்றும் உணவு.

சில செய்யக்கூடாத கலாச்சார நடவடிக்கைகளை பார்ப்போம்.

தாய்லண்ட் மற்றும் அரபு தேசங்களில் ஒருவரை ஷூ அல்லது காலாலோ சுட்டிக் காட்டக் கூடாது.

பல ஆப்பிரிக்க தேசங்களில் பழங்குடியினரின் தலைவருடன் பேசும்பொழுது நம் தலை அவருடைய தலையை விட உயரமாக இருக்கக்கூடாது.

ஆண்கள் ஒரு போதும் மிகவும் பழமைவாதி முஸ்லிம் பெண்மணியுடன் கைகுலுக்க முயற்சிக்கக்கூடாது.

ஜப்பானியர்களின் வீட்டிற்குள் ஒருபோதும் ஷூ அணிந்து செல்லக்கூடாது.

ஸ்காண்டிநேவியாவில் சாப்பாடு சாப்பிட்ட பிறகு நன்றி சொல்ல ஒருபோதும் மறக்கக்கூடாது.

இந்தோனேசியாவில் ஒரு போதும் நின்றுகொண்டு சாப்பிடக்கூடாது.

சைனாவில் ஒருவரின் இறுதி சடங்கிற்கு சிவப்பு ஆடை அணிந்து செல்லக்கூடாது.

ஆஸ்திரியா இத்தாலி ஜெர்மனி மலேசியாவில் ஒருபோதும் பொது இடங்களில் சூயிங்கம் மெல்லக் கூடாது.

இந்தியா மற்றும் பல தேசங்களில் இடது கையால் உணவு உண்ணக்கூடாது.

ஸ்விட்சர்லாந்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் புல் வெட்டக்கூடாது. ஸ்பெயின் தேசத்தில் பொது இடங்களில் சோம்பல் முறிப்பதும் கொட்டாவி விடுவதும் மிகவும் ஆபாசமாகவும் ஒழுங்கீனமாகம் கருதப்படுகிறது.

கம்போடியாவில் 3 நபர்கள் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

அமெரிக்க தேசத்தில் 13 துரதிருஷ்டமான எண்ணாகக் கருதப்படுகிறது.

மங்கோலியர்களின் தொப்பியையோ தலையையோ குதிரையையோ ஒருநாளும் தொடக்கூடாது.

டாபூ என்பதை எப்படி மக்கள் பார்க்கிறார்கள்?

Taboo, டாபூ என்பது தடைசெய்யப்பட்ட, அல்லது தவிர்க்கப்பட்ட செயல் அல்லது நடவடிக்கை ஆகும். டாபூ ஒழுக்கம் மற்றும் நடத்தையின் அடிப்படையில் அமைகிறது. ஒரு கலாச்சாரத்தில் தடைசெய்யப்பட்ட பழக்கம் இன்னொரு கலாச்சாரத்தில் இல்லாமல் போகலாம்.

சில தடைசெய்யப்பட்ட பழக்கவழக்கங்கள் : கருக்கலைப்பு செய்து கொள்வது, மது அருந்துவது, கள்ளக்காதல், ஒரு பெண்ணிடம் அவளுடைய வயதைக் கேட்பது (முக்கியமாக ஆண்கள் கேட்கவே கூடாது) . இவை எல்லாமே இன்றைய காலகட்டத்தில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

இந்தியர்கள் பின்பற்றும் சில நல்ல பழக்கங்கள்.

இந்தியர்கள் ஒருபோதும் புத்தகத்தை அல்லது காகிதத்தை இறைவி சரஸ்வதியாக கருதுவதால் காலால் மிதிக்க மாட்டார்கள்.

பூமி அதிர நடக்க மாட்டார்கள்.

இந்து மதத்தை சேர்ந்த பெண்கள் நெற்றியில் திலகம் இல்லாமல் இருக்க மாட்டார்கள்.

தென்னிந்தியாவில் டாபூவை தோஷம் அல்லது தெய்வ குற்றம் என்று சொல்வார்கள். ஒருவருக்கு திருஷ்டி கழிப்பது என்பது தோஷத்தை நீக்குவதாக கருதப்படுகிறது. தோஷங்களுக்கு பரிகாரம் செய்து கொள்வது என்பது மிக சாதாரணமானது.

திருமணம் நடப்பதற்கு, குழந்தை பிறப்பதற்கு, நல்ல வேலை கிடைப்பதற்கு என்று எல்லாவற்றிற்கும் தோஷநிவர்த்தி, தோஷ பரிகாரம் செய்யப்படுகிறது.

மேலும் சில கட்டுப்பாடுகளை பார்ப்போம். பெண்கள் மாதவிடாய் சமயத்தில் விலகியிருப்பது. பெண்கள் மாதவிடாய் காலங்களில் சமைப்பது பூஜை செய்வது போன்றவை இன்னமும் பல ஆச்சாரமான குடும்பங்களில் கடுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. இதை நாம் பிற்போக்கான பழக்கம் என்று சொல்ல முடியாது. மாதவிடாய் காலங்களில் ஒரு பெண்ணுக்கு பரிபூரண ஓய்வு தேவை.

முற்காலத்தில் கூட்டுக் குடித்தனமாக இருந்தனர். அப்பொழுது பெண்களுக்கு நிறைய வேலைகள் இருக்கும். கிணற்றில் நீர் இறைப்பது, மாடு கழனி வேலைகள், கரி அடுப்பு விறகு அடுப்புகளில் சமையல் போன்றவை. அதனால் மாதத்திற்கு மூன்று நாட்களாவது ஓய்வாக இருக்கட்டுமே என்று மாதவிடாய் காலங்களில் ஒரு பெண்ணிற்கு ஓய்வு தரப்பட்டது. ஆனால் காலப்போக்கில் நவீன வசதிகள் வந்த பிறகு, பெண்கள் எல்லோரும் பணிக்கும் செல்லத் துவங்கி விட்டதால் இந்தப் பழக்கம் பல இடங்களில் பின்பற்றப்படுவதில்லை. ஆனால் கோவிலுக்குச் செல்வது பூஜை போன்றவைகளில் பங்கேற்பது முதலியவை மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு அனுமதியில்லை. மாதவிடாய் காலங்களில் பெண்கள் அசுத்தமாக இருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் பெண்களுக்கு ஓய்வு தேவை என்பதே முதல் நோக்கமாகும்.

குழந்தை பெற்ற பெண்டிர்க்கு நிறைய கட்டுப்பாடுகள். முக்கியமாக உணவுக் கட்டுப்பாடு. பச்சை உடம்புக்காரி என்று பல சலுகைகள் அவளுக்கு அளிக்கப்படுகின்றன. உணவில் வாய்வுப் பதார்த்தங்கள் தவிர்க்கப்படுகின்றன.

உணவுப் பழக்கங்களில் டாபூ:

வைதீகமான ஆச்சாரமான குடும்பங்களில் பூண்டு வெங்காயம் முள்ளங்கி முருங்கைக்காய் போன்றவை உண்பது தவிர்க்கப்படுகிறது. இந்த காய்கறிகள் ரஜோ தமோ குணத்தை வளர்ப்பதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. ஆனால் பெங்காலை சேர்ந்தவர்கள் அந்தணர்கள் ஆக இருந்தாலும் மீன் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்களின் மீனை அசைவ உணவாக கருதுவதில்லை.

அதேபோல் அசைவம் சாப்பிடுபவர்கள் கூட விரத நாட்களில் அசைவம் சாப்பிடுவதில்லை.

சனாதன தர்மமாகிய இந்து மதம் பல கலாச்சார கோட்பாடுகளை உள்ளடக்கியது. தென்னிந்தியாவில் ஒரு சாரார் உடைகளில் கூட மிகுந்த ஆசாரத்தை பின்பற்றுவார்கள். ஒன்பது கஜம் புடவையை மடிசார் ஆக அணிந்து கொள்வது என்பது தென்னிந்தியாவில் சர்வசாதாரணம்.

டாபூ என்பது நன்மையா தீமையா என்பதை பற்றி நாம் இப்போது பார்ப்போம். 1920களில் கடல் கடந்து செல்வதே டாபூவாக கருதப்பட்டது. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தன் தாய்க்கு மூன்று வாக்குறுதிகளைக் கொடுத்த பிறகே வக்கீலுக்கு படிக்க லண்டன் சென்றார். புலால் உண்ண மாட்டேன், மது அருந்த மாட்டேன், பிற பெண்களை தாயாகவும் சகோதரியாகவும் மதிப்பேன் என்ற மூன்று வாக்குறுதிகளையும் தன் வாழ்நாள் முழுவதும் பின்பற்றினார் மகாத்மா காந்தி. அதேபோல் கணிதத்தில் ரிசர்ச் செய்ய கணிதமேதை ராமானுஜத்திற்கு கேம்பிரிட்ஜ் செல்ல வாய்ப்பு கிடைத்தபோது சைவ உணவு கிடைக்காமல் பல நாட்கள் பட்டினியாக இருக்க நேரிட்டது அவருக்கு. அதனாலேயே நோய்வாய்ப்பட்டு திரும்பி வந்து மிக இளம் வயதிலேயே உயிர்நீத்தார்.

காலத்திற்கேற்ப நம் கட்டுப்பாடுகளை நாம் மாற்றிக் கொள்ளலாம். டாபூ என்ற பெயரில் மக்கள் மூட நம்பிக்கைகளை வளர்த்துக் கொள்ளல் ஆகாது. உடல்நலம் இல்லாத போதும் விரதம் இருக்க வேண்டும் என்பதற்காக உணவு உண்ணாமல் இருத்தல் மூடநம்பிக்கையே அன்றி டாபூ அல்ல.

.     .     .

Discus