Image by StockSnap from Pixabay 

பிரமிளா போட்டித் தேர்வுக்கு தன்னை நன்கு தயார் செய்து கொண்டிருந்தாள். எந்தக் கேள்விக்கும் பதில் அவளிடம் தயாராக இருந்தது.

"பரிட்சை ஹால்ல போய் ஆன்சர் தெரியாம ஆந்தை மாதிரி திருதிருன்னு முழிக்காதே" என்ற பெற்றோரின் உத்தரவிற்கு கீழ்படிந்து இரவுபகல் கண்விழித்து படித்தாள்.

பரீட்சை நாள். பிரமிளாவிற்கு மிகவும் படபடப்பாக இருந்தது. பிளஸ் 2 விலும் நல்ல மதிப்பெண்கள் பெற்ற பெண் அவள். இந்தப் போட்டித் தேர்விலும் நல்ல மார்க் வாங்கினால் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும்  என்று அம்மாவும் அப்பாவும் மாறி மாறி கூறி அவள் மூளையை சலவை செய்து வைத்திருந்தனர். 

மதிப்பெண்கள் மட்டுமே ஒருவரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்ற எண்ணம் பிரமிளாவின் மனதில் ஆழமாக வேரூன்றி இருந்தது. போட்டித் தேர்வும்,  அதில் வெற்றி பெறுவதும் தான் வாழ்க்கை என்று திடமாக நம்பினாள் பிரமிளா. 

எதையாவது  மறந்து விடுவோமோ என்று மிகவும் பயமாக இருந்தது பிரமீளாவுக்கு. எல்லாவற்றையும் பார்த்து பார்த்து எடுத்து வைத்துக் கொண்டாள். அம்மாவும் அப்பாவும் வேறு வீட்டில் இல்லை. சித்திக்கு பிரசவம், ஆஸ்பத்திரியில் சேர்த்து இருப்பதாக தகவல் வந்ததால் இருவரும் புறப்பட்டு சென்று விட்டனர்.

"பரீட்சை நல்லா எழுது, மழை பேஞ்சு குளிருது. ஸ்வெட்டர்  போட்டுட்டு போ"  என்று அம்மா கூறிவிட்டுப் போனாள்.

பதட்டப்படாமல் இருக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டே ஆனால் டென்ஷனுடன் புறப்பட்டு போனாள் பிரமீளா. முக்கியமானதை மறந்து விட்டோம் என்ற நினைப்பு இல்லை அவளுக்கு. 

பரீட்சை ஹாலில் எக்ஸாமினர்  ஹால் டிக்கெட்டை காண்பிக்கும்படி சொன்ன பிறகுதான் தான் அதை எடுத்து வராதது நினைவிற்கு வந்தது பிரமிளாவிற்கு. "ஹால் டிக்கெட் இல்லைன்னா பரீட்சை எழுத முடியாது. யூ கேன் கோ அவுட்"  என்று பரீட்சை அதிகாரி நிர்தாட்சண்யமாக அவளை வெளியில் அனுப்பி விட்டார். 

பிரமிளாவிற்கு உலகமே இருண்டது. டீச்சர், தோழிகள், பெற்றோர் எல்லோருக்கும் என்ன பதில் சொல்வாள்? அம்மா அப்பாவின் திட்டுக்களை நினைத்துக் குலை நடுங்கியது அவளுக்கு.

துக்கம் தொண்டையை அடைக்க வீட்டிற்கு வந்தாள். ஒரே தீர்வு தற்கொலைதான். அணிந்திருந்த தாவணியை கழற்றினாள்.

மின்விசிறியில் மாட்டி தூக்கு மாட்டிக் கொள்ளலாம் என்று மின்விசிறியை நோக்கி வீசினாள். ஜன்னல் அருகில் மிக ஹீனமான "அம்மா அம்மா" என்று ஒரு குரல் கேட்டது. தூக்கிவாரிப் போட்டு கதவைத் திறந்து கொண்டு வெளியில் வந்தாள் பிரமிளா.  கையில் எட்டுமாத குழந்தையோடு குளிரில் நடுங்கியபடி இளம்பெண் ஒருத்தி நின்று கொண்டிருந்தாள்.

"ரொம்ப பசிக்குது மா ஏதாவது தாங்க, குளிருது வேற. குழந்தைக்கு ஜுரம் அடிக்கிது, போத்திக்க  தாங்க. " 

பிரமிளா கையில் இருந்த தாவணியை அந்த இளம் பெண்ணின் கையில் கொடுத்தாள். "இரு சாப்பாடு கொண்டு வரேன் " என்று கூறிவிட்டு உள்ளே போய் குழந்தைக்கு பாலும் அவளுக்கு சாப்பாடும் எடுத்து வந்து கொடுத்தாள்.

"நல்லா இருப்பே. உனக்கு எல்லாம் நல்லா நடக்கும் " என்று கூறிவிட்டு பிச்சைக்காரி அங்கிருந்து சென்றாள்.

பிரமிளாவின் மனம் இப்போது தெளிவாக இருந்தது. தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்று புரிந்தது. பரீட்சை அடுத்த முறை வெற்றிகரமாக எழுதலாம் என்று தீர்மானித்து பெற்றோரை எப்படி எதிர்கொள்ளலாம் என்று தைரியமாக தன்னை தயார் செய்து கொண்டாள்.

.    .    .

Discus