Source: Danie Franco on Unsplash

முதுமை ஒரு வரம் முதுமை ஒரு அழகு என்கிறார்கள். முதுமை எப்போதிலிருந்து ஆரம்பிக்கிறது ? 50 வயதிலா? 60 வயதிலா? அல்லது 70 வயதிலா? என் தந்தை தனது 90 வயதில் "எனக்கு வயதாகிவிட்டது என்று நினைக்கிறேன்" என்றார். "I think old age has come to me." என்று அவர் கூறியது நன்றாக நினைவிருக்கிறது. 

முதுமை என்பது என்ன.? முதுமைக்கு ஒரு வயது நிர்ணயம் உண்டா ? வயதான பலர் இளமை துள்ளும் நெஞ்சத்தோடு தான் இருக்கின்றனர். அவர்களுக்கு வயது ஒரு பொருட்டில்லை. ஆனால் தனிமை ஒருவரை முதியவராக உணரவைக்க கூடும். சிலர் எவ்வளவு இளமைத் துள்ளலுடன் இருந்தாலும் இளைஞர்களின் கூட்டத்தில் அவர்கள் பொருந்த மாட்டார்கள். அதேபோல் காலேஜ் குமரிகளின் நடுவே அல்லது மத்திய வயது பெண்களின் நடுவே ஓர் முதிர்ந்த பெண்மணி சென்றால் சட்டென்று அங்கு ஒரு மௌனம் நிலவும். வயதானவர்கள் பழங்கதைகளை பேசுவார்கள், அறிவுரைகள் தான் வழங்குவார்கள் என்ற ஒரு கண்ணோட்டம் தான் சமூகத்தில் நிலவுகிறது. ஆனால் உண்மையில் முதியவர்களின் நிலை என்ன.? அவர்களின் எதிர்பார்ப்பு என்ன? தேவை என்ன?

பல முதியவர்கள் தங்களை இளைஞர்களாக தான் நினைத்துக் கொள்கின்றனர் அதில் சந்தேகமில்லை. ஆனால் அவர்களுக்குள் இருக்கும் ஓர் உணர்ச்சிகரமான, உணர்வுப்பூர்வமான உலகம் அபூர்வமானது. அவர்களின் அபிலாஷைகள் லட்சியங்கள் மாறுபடுகின்றன.

பலர் தங்களுக்கு வயதாகிவிட்டது என்பதை உணராமலேயே தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற ரீதியிலேயே பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் நடந்து செல்ல வேண்டிய பாதை என்ன?, சந்திக்க வேண்டிய சவால்கள் என்ன? என்பதற்கு தயாராக இல்லாமலேயே இருக்கிறார்கள். ஒருவருக்கு 60வது வயது வரும்போது என்ன செய்யலாம் என்பதை சற்றே திட்டமிட்டுக் கொண்டால் தடுமாறாமல் இருக்கலாம்.

வாழ்க்கையின் சுழற்சியில் பல சம்பவங்கள் நிகழலாம். சீனியர் சிட்டிசன் என்ற பதவிக்கு வந்தபிறகு நம்மை விட பெரியவர்கள் பலரும் நம்மை பிரிந்து சென்றிருப்பார்கள். மனைவியோ கணவனோ அவர்தம் துணையை இழந்திருக்கலாம். மிகப்பெரிய வெற்றிடம் ஒன்று இப்படிப்பட்டவர்களை கவ்விக் கொள்ளும். ஒருவர் எவ்வளவு புகழ் பெற்றவராக இருந்தாலும் முப்பு என்பது ஒருவருக்கு தவிர்க்க முடியாதது. இப்போது இவர்கள் கடந்து செல்ல வேண்டிய பாதை மிகவும் கரடு முரடாக இருக்கும். ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக கீழே விழுதல் தடுக்கி விழுதல் போன்றவை நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எந்த நோய் வேண்டுமானாலும் விருந்தாளி போல் நம்மை வந்து அண்டலாம். ஏதாவது ஒரு நோயுடன் போராடிக் கொண்டே இருக்க வேண்டிய தருணம் கூட வரலாம்.

நம் உறவினர்களும் வயதானவர்களாக இருப்பார்கள். இதனால் யாரையும் உதவிக் கூட அழைக்க முடியாது. நம்மைச் சுற்றி பல ஏமாற்றுக்காரர்களும் பணம் சுருட்டுபவர்களும் இருப்பார்கள். தனியாக இருக்கும் முதியவர்களிடம் நிறைய பணம் மற்றும் சேமிப்பு இருக்கும் என்பது பலருக்கும் தெரியும். அதனால் தனியாக இருக்கும் முதியோர்களை குறிவைத்து தாக்கும் கும்பல்களிடமிருந்து நாம்தான் நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். போன் மூலம் ஏமாற்றுவது. ஆசைவார்த்தை காட்டுவது, பாஸ்வேர்ட் போன்றவைகளை ஹேக் செய்வது போன்றவைகளில் இருந்து நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பணத்தை நம்பிக்கையான நிறுவனங்களில் முதலீடு செய்து தகுந்த வாரிசுதாரர்களையும் நியமித்து வைக்க வேண்டும். யாரிடமும் தழைந்து போக வேண்டாம். யாரையும் தாழ்வாகவும் பேச வேண்டாம். மரியாதை என்பது நாம் கொடுப்பதில் இருந்து நமக்குக் கிடைக்கிறது.

பற்றுக்களை கொஞ்சம் கொஞ்சமாக நாம் விட கற்றுக் கொள்ள வேண்டும். பொருட்களின் மீதுள்ள ஆசைகளை நாம் துறக்க வேண்டும். எந்த செயலுக்கும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணமே கூடவே கூடாது. பிறகு என்றால் நாம் நம்முடைய தற்போதைய சந்தோஷங்களை இழந்துவிடுவோம். தள்ளிப்போடுதல் என்ற எண்ணம் வேண்டவே வேண்டாம். "இன்று, இப்பொழுது" அதுவே முதியோர்களின் தாரக மந்திரமாக இருக்க வேண்டும். முதியோர்களின் பாதுகாப்பில் சந்தோஷம் அதுவே மிக மிக முக்கியம்.

எழுபதுகளில் இருந்த தாய்மார்கள் மகளுக்கோ மகனுக்கோ திருமணம் செய்வித்து பேரன் பேத்தியை மடியில் போட்டு கொஞ்ச விரும்பினார்கள். அந்தக் காலகட்டத்தில் கூட்டுக் குடித்தனம் மிகவும் சாத்தியமாக இருந்தது. பெற்றோர் மட்டுமில்லாமல் உறவினர்கள் பலரும் அடிக்கடி வருவதும், திருமணமாகாத மச்சினர், கணவனை இழந்த நாத்தனார் போன்றவர் வீட்டோடு இருப்பது என்பது மிகவும் சகஜமாக இருந்தது. என்னுடைய தையல் டீச்சர் தன்னுடைய இரண்டு மச்சினர்களையும் கடைசிவரை வைத்துக் காப்பாற்றினார். அவர்கள் ஆண்கள் என்பதால் வீட்டு வேலையும் செய்ய மாட்டார்கள். டீச்சர் எல்லா வேலையும் செய்வார். தையல் வகுப்புகளும் எடுத்து வந்தார். அதன் பிறகு காலம் மாறியது. கொஞ்சம் கொஞ்சமாக உள்ளூர் ஆக இருந்தாலும் தனிக்குடித்தனம் செய்வதையே புதுமணத்தம்பதிகள் விரும்பினர். தொலைக்காட்சியின் ஆதிக்கத்தால் நாடகங்கள் தொடர்கள் பார்க்கும் ஆசையில் பெரியவர்களும் இதற்கு இடம் கொடுத்தனர். வேலைக்குச் செல்லும் மருமகளாக இருந்தால் பொறுப்பும் வேலையும் பெரியவர்களுக்கும் அதிகரித்தது. "அவள் ஆபீஸில் இருந்து வந்தால் நேரே தன் ரூமுக்கு போய் விடுவாள். ராத்திரிக்கு வேணுங்கிறத நான்தான் பார்த்து பண்ணவேண்டும் என்று அலுத்துக்கொள்ளும் மாமியார்கள், டிவி சீரியல்களில் மூழ்கிப் போனார்கள். மருமகள்களும் அதே !! "நாம தனியா இருந்தா நமக்கு பிடித்ததை பார்க்கலாம் இல்ல , அத்தை பாக்குறதெல்லாம் நானும் பாக்கணுமா ? "என்று வாதிட்டு தனிக்குடித்தனம் போனார்கள்.

90களின் கடைசியிலிருந்து வெளிநாடுகளில் வேலை பார்க்கும் ஆண்களும் பெண்களும் அதிகரித்தனர். அதற்கு முன்பும் இருந்தது.

இப்போது தாய்மார்களின் கனவு கலர்கலராக அமைந்தது. பெண்ணோ, மருமகளோ இவர்களின் பேறுகாலம் நெருங்கும் போது பிரசவத்திற்கு தாய்மார்கள் சென்றனர். 50, 55 வயதில் வெளிநாட்டை சுற்றிபார்க்க கிடைத்த வாய்ப்பு, அங்கு உள்ள சவுகரியங்கள், காரிலேயே போகும் சொகுசு இவற்றினால் மதிமயங்கியது என்னவோ உண்மைதான்!!! ஏழெட்டு முறை அமெரிக்கா ஆஸ்திரேலியா ஜப்பான் துபாய் ஜெர்மனி போன்ற ஊர்களுக்குச் சென்று வந்த பிறகு சிறிதே அலுப்பு தட்ட துவங்கியது தாய்மார்களுக்கும் தந்தைமார்களும். '18 மணி நேரம் டிராவல் பண்ண முடியலை ' என்ற டயலாக் அடிக்கடி கேட்க துவங்கியது. "இங்க மாதிரி அங்க ஃப்ரீயா நம்மளால வெளியில் போக முடியாது. எல்லாத்துக்கும் அவாளை எதிர் பார்க்கணும்" புளித்துப்போன வசனம்.

இப்போது மெயின் மேட்டருக்கு வருகிறேன்.

"வயசான அம்மா இருக்கா அப்பா இருக்கா, அவாள் எல்லாம் விட்டுட்டு அமெரிக்கா போக முடியாது. கிரீன் கார்டு வாங்கிடறேன், புள்ள வா வான்னு கூப்பிடுறான், பொண்ணும்தான் கூப்பிடறா. ஆனா போக முடியாது போக பிடிக்கலை. "

இதற்கெல்லாம் என்ன காரணம் ? வயதான அம்மா அப்பாவா?

அவர்கள் மட்டுமில்லை. நாம் சேர்த்து வைத்திருக்கும் பொருட்களும் தான்.

ஒவ்வொருவருக்கும் குறைந்தது இரண்டு வீடுகள் உள்ளது. எல்லாவற்றிலும் சாமான்கள் நிரம்பி வழிகின்றன. பர்னிச்சர்கள், பீரோ கொள்ளாத புடவைகள், சமையலறை சாதனங்கள் இன்னும் பல. நம்மால் ஏன் எளிமையாக வாழ முடியவில்லை ? மகாத்மா காந்தியின் கோட்பாடுகளை நாம் பின்பற்றுகிறோமா ? ஒரு ஜவுளிக்கடையே அல்லவா நம் வீட்டில் குடி இருக்கிறது. "எனக்கு வீட்டை ஒழிக்கணும் யாராவது வந்து ஹெல்ப் பண்ணினால் தேவலை ." இது நான் சொல்லும் டயலாக், அடிக்கடி.

*Most main matter*

முதியோர்களை முதியோர்களே பார்த்துக் கொள்ளும் அவலம் தான் இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. 60 வயது சீனியர் சிட்டிசன்கள் 85 90 வயதான தன் தாய் தந்தையரை பார்த்துக்கொள்கிறார்கள் அக்கறையுடன். வேறு வழி இல்லை. கணவனை இழந்த பெண்கள் சிலர் மாமியாரை கூட அன்புடனே பார்த்துக் கொள்கிறார்கள். மனைவியை இழந்த கணவன் தன் 94 வயது தாயை அக்கறையுடன் கவனித்துக் கொள்கிறான். இவையெல்லாம் நான் கண்கூடாக பார்த்தவை.

இதில் எள்ளளவும் மிகைப்படுத்தல் கிடையாது. இந்த 60 வயது சீனியர் சிட்டிசன்களின் குழந்தைகள், வெளிநாடுகளில் தங்கள் குழந்தைகளோடு ஆன்லைன் கல்வியில் போராடிக்கொண்டிருக்கிறார்கள். "அம்மா அப்பாவ வரவழைக்கலாம்னா பாட்டி இருக்கா, தாத்தா படுத்த படுக்கையா இருக்கா. என்ன பண்றது ? " *மிகப்பெரிய கேள்விக்குறி அவர்களுக்கு*

இந்த அறுபது வயது சீனியர் சிடிசன்களுக்கு அதுவும் குறிப்பாக தாய்மார்களுக்கு ஓய்வு எப்போது ? எப்போது அவர்கள் தாம் விரும்பியபடி வாழ்க்கையை அனுபவிக்கப் போகிறார்கள்?

என்னை பொறுத்தவரை நான் விரும்பிய சங்கீதத்தை கேட்கிறேன், விரும்பிய சாப்பாட்டை செய்தோ வாங்கியோ சாப்பிடுகிறேன். ஆனால், கொஞ்சம் மறதி வந்துவிட்டது. கேஸ் சிலிண்டர் இருப்பது தெரியாமல் புக் செய்து விட்டேன். அவர் வந்து விட்டு திருப்பி எடுத்துக்கொண்டு போனார். நல்லவேளை என்னைக் கோபித்துக் கொள்ளவில்லை.

இன்னொரு விஷயம் , நிறைய வயதான உறவினர்கள் இருக்கிறார்கள். வாருங்கள் வந்து எங்களுடன் தங்குங்கள் என்று கூப்பிட்டால் அவர்கள் வருவதற்கு தயாராக இல்லை.

காரணங்கள் பல. வீட்டை பூட்ட முடியல., மாடில டெனன்ட் வச்சிருக்கோம் , அவா மோட்டர் ஒழுங்கா போடாம வீணாக்கிடுவா,

ஒண்ணு விட்ட அத்தையோட கொள்ளு பேரனுக்கு பூணூல் கல்யாணம் வரது அடுத்த மாசம், அதுக்கப்புறம் முடிஞ்சா வரேன்., போன்ற உப்புச்சப்பில்லாத காரணங்கள். வட்டம் சுருங்கி விட்டது என்பதே உண்மை. வீடு, டிவி, டிவி சீரியல், இதைத்தாண்டி வேறு எதையும் யோசிக்கத் தெரியாத ஒரு சாரார்.

சுலோக கிளாஸ் போறேன். திருப்புகழ் சேர்ந்து இருக்கேன். அபிராமி அந்தாதி சௌந்தர்யலஹரி லலிதாசகஸ்ரநாமம் எல்லாமே ரொம்ப நன்னா அந்த மாமி சொல்லித் தரா. வைஷ்ணவர்கள், பிரபந்தம் கத்துக்கறேன் கோஷ்டியில் போறேன், என்று தன்னைத் தானே சுறுசுறுப்பாக வைத்துக் கொள்கிறார்கள். நல்ல விஷயம்தான். (நானும் இப்போது அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். ஸ்திரீகள் ஸ்தோத்திர பாட கோஷ்டியில் சேர்ந்து இருக்கிறேன்)

*மீண்டும் மெயின் மேட்டர்*

இதையெல்லாம் மீறி சீனியர் சிட்டிசன்களான நாம் இந்த சொசைட்டிக்கு இந்த சமுதாயத்திற்கு என்ன செய்தோம், செய்கிறோம், செய்யப்போகிறோம்?

சமுதாய சிந்தனை உள்ளவர்கள் நிச்சயம் இந்த கேள்வியை தனக்குத்தானேயாவது கேட்டுக் கொள்வார்கள்.

இன்றும் நம் தமிழ்நாட்டில் படிப்பறிவு இல்லாத ஒரு சமுதாயம் இருக்கிறது. நம் வீடுகளில் வேலை செய்யும் பணி பெண்களே அப்படித்தானே ?

என் வீட்டு வேலைக்காரி அவள் பெண் இருவருக்குமே கல்வியறிவு இல்லை. பெண்ணின் வயது 32 தான். நன்றாக அலங்காரம் செய்து கொள்வாள் நன்றாகவும் இருப்பாள் பார்ப்பதற்கு. தமிழில் கூட எழுத்து கூட்டி படிக்க தெரியவில்லை அவளுக்கு. அவளுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் , கல்வி அறிவினால் எவ்வளவு பயன் உண்டு என்பதை அவள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று எடமலைப்பட்டி புதூரில் நடந்த மகளிர் தின கொண்டாட்டத்திற்கு அழைத்துச் சென்றேன். அவளைக் கோலப் போட்டியில் கலந்து கொள்ளவும் வைத்தேன். பரிசு எதுவும் அவளுக்கு கிடைக்கவில்லை. ஆனால் அன்று நடந்த கொண்டாட்டங்களில் அவள் மிகவும் லயித்துப் போனாள். "நல்லா இருந்துச்சு மாமி" என்று என்னிடம் மனப்பூர்வமாக கூறினாள். *ஆனால் மறுநாளே வேலைக்கு லீவு போட்டாள். "நாள்பூரா உட்கார்ந்தது ஒரே இடுப்புவலி மாமி" என்றாள்* 63 வயதில் எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

அடிக்கடி இவள் லீவு போட்டுவிட்டு தன் தாயை, தான் செய்யும் வேலையை செய்ய வைத்து விடுகிறாள். அவள் தாயும் முனகிக்கொண்டே வந்து செய்வாள்.

இவர்களுக்கெல்லாம் ஏன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் படிக்க வேண்டும் என்று தோன்றுவதில்லை.

நம்மிடம் இருக்கும் பணம் ஏதோ ஆகாசத்தில் இருந்து வந்தது போலவும், அதை அவர்களுக்கு கொடுப்பதில் நாம் கருமித்தனம் பார்ப்பது போலவும் நினைத்துக் கொள்கிறார்கள். நாம் படித்து உழைத்து சம்பாதித்த காசில் இன்று உட்கார்ந்து சாப்பிடுகிறோம். ஆனால் இன்னமும் சிக்கனமாக இருக்க வேண்டிய சமயங்களில் சிக்கனமாக தான் இருக்கிறோம். 

*கல்வி பண்பாடு இவற்றின் அறிவை அவர்களுக்கு ஏற்படுத்த நாம் முயலலாம்*

தொழிற் கல்வியின் முக்கியத்துவத்தை பலருக்கு எடுத்துச் சொல்லலாம். முதியோர்கள் தங்களுக்கு தெரிந்த கலைகளை அல்லது டியூசன் எடுத்து கெமிஸ்ட்ரி கணக்கு சயின்ஸ் போன்ற கடினமான பாடங்களை   மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கலாம்.  

இதை நான் ஒரு வேள்வி போல் செய்யலாம் என்று இருக்கிறேன். மேலும் பல ஆலோசனைகளை எல்லோரும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

.    .    .

Discus