புது தில்லி ரயில் நிலையத்தில் முகமூடி அணிந்த மக்கள் பயமுறுத்துவது போல் மெதுவாக இங்குமங்கும் அலைந்து கொண்டிருந்தனர்.
ரீனா மிகவும் சோர்வாக இருந்தாள். சூடாக ஏதாவது அருந்திவிட்டு குளித்தால் தேவலை போலிருந்தது அவளுக்கு. ஆனால் உடைமைகளை யார் பார்த்துக் கொள்வார்கள்?
யோசித்துக்கொண்டே பொது ஓய்வு அறைக்குள் சென்றாள். காலியாக இருந்த பல இருக்கைகள் அவளை "வா வந்து என் மீது அமர்ந்து கொள் என்று சொல்வது போல் தோன்றியது அவளுக்கு. ஒரு பெண் தரையில் அமர்ந்து மும்மரமாக ஏதோ படிவங்களை நிரப்பிக் கொண்டிருந்தாள்.
அவளருகில் காலியாக இருந்த ஒரு நாற்காலியில் சென்று அமர்ந்தாள் ரீனா. இந்தப் பெண்ணிடம் நம் லக்கேஜை 5 நிமிடம் பார்த்துக் கொள்ள சொல்லலாமா என்று ரீனா நினைத்தபோது அந்தப் பெண்ணும் அவளைப் பார்த்து முறுவலித்தாள்.
"ஐ அம் ஃப்ரம் ராஞ்சி" என்றாள் ரீனா.
"மீ பாம்பே, மாதுரி " என்றாள் அவள்.
"விசா இன்டர்வியூ? " மாதுரியின் நெற்றிச் சுருக்கமும் குரல் தொனியும் கேள்வியாய் வெளிப்பட்டது.
"எஸ்" என்றாள் ரீனா ஆச்சரியத்துடன்.
"இன்னும் இருவர் இருக்கின்றனர் சாப்பிடுவதற்காக போய் இருக்கிறார்கள்" என்றாள் மாதுரி. "வாவ், நான் தனி இல்லை" குஷியாக கூறினாள் ரீனா.
"உனக்கு எப்ப விசா இன்டர்வியூ?" மாதுரி கேட்டாள்.
"நாளை "
"நம் எல்லோருக்குமே நாளை தான் "
மற்ற இரு பெண்களும் அப்போது அங்கு வந்தனர்.
"ஹாய் ஐ அம் ஷீலா அண்ட் திஸ் இஸ் தாமினி" இரு பெண்களும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
" நாளை மதியம் தான் விசா இன்டர்வியூ அதுவரை எங்கே தங்குவது?"
ரீனாவின் கேள்விக்கு பதில் சொன்னாள் மாதுரி.
"இந்த ரிட்டயரிங் ரூமிலேயே தங்கி விடலாம். நாளை இரவு 10 மணிக்கு எனக்கு ட்ரெயின்.
என் டிக்கெட்டை காண்பித்து விட்டு நாம் நால்வருமே இங்கேயே தங்கி கொள்ளலாம் வெளியில் ஹோட்டலில் தங்கினால் அதிக செலவு "
மாதுரியை நன்றியுடன் நோக்கினாள் ரீனா.
மளமளவென்று குளித்துவிட்டு சாப்பிட்டுவிட்டு தோழிகள் நால்வரும் விசா இன்டர்வியூவில் எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று டிஸ்கஸ் செய்ய தொடங்கினர்.
இருவர் மேற்படிப்பிற்கும் இருவர் வேலைக்கும் யூஎஸ் செல்கின்றனர் என்பது தெளிவாகியது.
ரீனாவிற்கு இந்த புதிய அறிமுகங்கள் பெரும் பலத்தையும் புதிய தெம்பையும் கொடுத்தாற்போலிருந்தது.
மொபைலில் தன் சகோதரிக்கு தான் பாதுகாப்பாக இருப்பதாக முதலில் செய்தியை அனுப்பினாள் ரீனா.
"ஓகே இப்போது எல்லோரும் அவரவர் பற்றி சொல்லுங்க. லாக்டௌன் எல்லோரையும் புரட்டி போட்டுடுச்சு. எல்லாமே ஒரு பெரிய கேள்விக்குறியா ஆயிடுச்சு. நான் யுஎஸ் போறேன். வேலை கிடைச்சிருக்கு. நாளைக்கு விசா இன்டர்வியூ. நீங்களும் உங்களைப் பற்றி சொல்லுங்க." என்றாள் மாதுரி.
"நான் முதல்ல சொல்றேன்" என்று ஆரம்பித்தாள் ரீனா.
முதல் லாக் டவுன் ஆரம்பித்தவுடனே என்ன செய்வது என்று தெரியவில்லை. வேலை போயிடுச்சு. வீட்டுக்கு வந்துட்டேன். என் சம்பளத்தை நம்பி தான் வீட்டில் இருந்தாங்க. அப்பாவும் தம்பியும் விவசாயம் பாத்துட்டு இருந்தாங்க. தம்பிய கூட படிக்க வைக்காம என்னைதான் படிக்க வச்சாங்க. ஹாஸ்டல்ல இருந்து படிச்சதே ஒரு பெரிய கஷ்டகாலம். அப்பாவும் தம்பியும் ரொம்ப கஷ்டப்பட்டு பணம் அனுப்புறாங்கன்னு ரொம்ப சிக்கனமா இருப்பேன். என் ஃப்ரெண்ட்ஸ் யாராவது ஏதாவது சாப்பிட வாங்கி கொடுத்தால் கூச்சப்படாம வாங்கி சாப்பிடுவேன். நான் படிச்ச படிப்புக்கு நல்ல வேலை கிடைச்சது. ஆனால் வேலை இல்லாமல் வீட்டுக்கு வந்தவுடனே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. வீட்ல உள்ளவங்க என்னை ரொம்ப சமாதானம் பண்ணினாங்க. நான் முன்னாடி அனுப்பிச்சி இருந்த பணத்தை ரொம்ப செலவு பண்ணாம சேர்த்து வெச்சிருந்தாங்க. அதனால கொஞ்ச நாள் ஓடிச்சு. அப்புறம் ஆன்லைன் ஸ்கூல் ஆரம்பிச்சிடுச்சு. சில பசங்களுக்கு டியூஷன் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். அதிலே கொஞ்சம் பணம் வந்தது. இதுக்கு நடுவுல என் ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேரு வேலை இல்லாம கஷ்டப்படுறாங்க என்று தெரியவந்தது. அவங்களையும் இன்னும் பலரையும் சேர்த்து ஒரு வாட்ஸ்அப் குரூப் ஆரம்பிச்சேன்.குரூப்புக்கு 'கலக்கல் அரட்டை'ன்னு பெயர் வச்சேன்" இதுக்கு செம என்கரேஜ்மெண்ட். பணக்கார பசங்க ஏழை மக்களுக்கு உதவ தயாரா இருந்தாங்க. நொந்து நூடுல்ஸா இருந்த என்னுடைய பிரண்ட்ஸ் இந்த குரூப்ல சேர்ந்தப்பறம் ஒரே உற்சாகமா ஆயிட்டாங்க. எல்லோருமே ஏதாவது ஒரு விதத்தில் மத்தவங்களுக்கு உதவி செய்யணும்னு ஆர்வத்தோட இருந்தாங்க. ஒருத்தருக்கு ஒருத்தர் ரொம்ப ஆதரவா இருந்தாங்க. தற்கொலை செஞ்சுகிடலாமுன்னு நினைச்சவங்க அந்த எண்ணத்தில் இருந்து மீண்டு வந்தாங்க. நிறைய மக்களுக்கு கவுன்சிலிங் கொடுத்தாங்க. இப்ப எனக்கு அமெரிக்காலயே வேலை கிடைச்சி போகப்போறேன். என்னுடைய கிராமத்துக்கும் கிராம மக்களுக்கும் இதன் மூலமா நான் எதாவது செய்யணும்னு ரொம்ப பிரியப்படுகிறேன். " சொல்லி முடித்து நீண்ட பெருமூச்சு விட்டாள் ரீனா.
"அடுத்து தாமினி நீதான் நீ சொல்லு" என்றாள் மாதுரி.
"Ok" என்றவாறு ஆரம்பித்தாள் தாமினி.
"எனக்கு சொந்த ஊரு திருச்சி. அப்பா பலசரக்கு கடை வச்சிருக்காரு. யூஎஸ்ல ஸ்காலர்ஷிப் கிடைத்து எம்பிபிஎஸ் படிச்சிகிட்டிருந்தேன். தேர்ட் இயர் படிக்கும்போது எங்க அக்கா ரொம்ப உடம்பு முடியாம போயிட்டா. அவளைப் பாக்கணும்னு ஜனவரி 2020ல லீவு எடுத்துக்கிட்டு பணம் செலவழித்து வந்தேன். பிப்ரவரி கடைசியில அவளும் இறந்து போயிட்டா, லாக்டௌனும் ஆரம்பிச்சிடுச்சு. எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை திரும்பி போக முடியல. படிப்பு பாதியிலேயே நிக்குது. யுனிவர்சிட்டியில் அப்புறமா வந்தா கன்டினியூ பண்ணிக்கலாம்னு கன்செஷன் கொடுத்தாங்க. சரி அம்மா அப்பாவோட சந்தோஷமா இருக்கலாம் அவங்களை நல்லா பாத்துக்கலாம்னு முடிவு பண்ணினேன். கொரோனவைரஸால உலகம் இப்படி மாறும்னு நினைக்கவே இல்ல. இந்தக் கொடுமையான கொரோனா வைரஸ் பொருளாதாரம், ஜாதி, மதம் போன்ற தடுப்புச்சுவர்களைத் தாண்டி எலக்ட்ரிக் கம்பத்திலிருந்து பாயும் மின்சாரம் போல் எதையுமே விட்டு வைக்கல. எல்லாத்துலயும் ஒரே சீராக பாஞ்சுது. வைரஸ் பரவியதன் வேகம் மக்களுடைய வாழ்வாதாரத்தையே பாதித்தது. ஏதாவது ஒரு சிறு துரும்பு கூட ஒரு நம்பிக்கையையோ, எதிர்பார்ப்பையோ தரும் என்றால் அதைப் பிடிச்சுக்க எல்லோருமே தயாரா இருக்காங்க. இந்த பேண்டமிக் பீரியட்ல எல்லா மக்களுடைய எண்ணமும் ஒன்று பட்டது. அதை மறுக்க முடியாது. என்னுடைய உறவினர்களும் நண்பர்களும் என்னை வற்புறுத்தி இப்ப படிப்பை தொடர வச்சுட்டாங்க. யுஎஸ்ல இன்னும் கொரோனா தாக்குதல் அதிகமாக இருக்கறதுனால ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் எனக்கு ஆசீர்வாதமும் அட்வைஸும் தந்து இருக்காங்க."
பெட்டியிலிருந்து எடுத்து காண்பித்தாள் தாமினி.
" ஒரு சினேகிதி எனக்கு என்னுடைய பர்த்ஸ்டோனை அழகா ஒரு வெல்வெட் பையில் போட்டு கொடுத்தா. சிலர் என்ன இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி போகலாம்னு சொன்னாங்க. ஆனா எல்லாருமே என்ன ரொம்ப வாழ்த்தினாங்க. எனது நண்பன் எனக்கு ஒரு குதிரை லாடத்த கொடுத்து இது உன்னை எப்போதும் காப்பாற்றும் அப்படின்னு சொன்னான். அவனுக்கு அது இமாலயத்தில் கிடைச்சுதாம். குதிரை லாடம் என்னை காப்பாத்துதோ இல்லையோ அவனோட அன்பும் அக்கறையும் நிச்சயமா காப்பாத்தும். என்னோட முஸ்லிம் சினேகிதி மந்திரிச்ச தாயத்து கொடுத்திருக்கா. என்னோட மாமியாரும் அம்மாவும் சாமி கிட்ட வச்ச காசை முடிஞ்சு கொடுத்திருக்கிறாங்க."
" ஹேய், கல்யாணம் ஆயிருச்சா உனக்கு, ஹஸ்பண்ட தனியா விட்டுட்டு வந்திட்டயா? " மற்ற மூவரும் கோரஸாக வினவினர்.
"இல்ல, அவரு ஏற்கனவே யூஎஸ் போயிட்டாரு" வெட்கத்துடன் கூறினாள் தாமினி.
"அப்புறம் ஃபெர்னாண்டஸ் அங்கிள் சர்ச்லேர்ந்து ப்ரேயர்ஸ் அனுப்பியிருக்காரு. மதம், பிரார்த்தனை இதிலெல்லாம் ரொம்ப நம்பிக்கை கிடையாது. ஆனா இப்ப எல்லா சாமியும் ஒரே சாமியாத்தான் தோணுது. எப்போதுமே என்னுடைய ஹேண்ட் லக்கேஜ் ரொம்ப லைட்டா தான் இருக்கும். ஆனா இப்ப ரொம்ப ஹெவியாதான் இருக்குது, ஏன் தெரியுமா? அது உள்ளாற இப்போ எல்லோருடைய அன்பு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள், நம்பிக்கைகள், ஆசைகள் எல்லாமே இருக்குது. " சொல்லிவிட்டு கண்களை துடைத்துக்கொண்டாள் தாமினி.
ஷீலா மாதுரி ரீனா மூவரும் தாமினியின் அருகில் வந்து அவளை அணைத்துக் கொண்டனர்.
நான்கு திசையில் இருந்து வந்த நால்வர். ஆனால் அவர்களின் இலக்கு ஒன்றே.
இரண்டு நிமிடங்கள் மௌனத்தில் கரைந்தது.
" லிசன் டு மீ கேர்ள்ஸ் " ஷீலா ஆரம்பித்தாள்.
"நான் தஞ்சாவூர் சாஸ்த்ரா யூனிவர்சிட்டில படிச்சுட்டு சென்னையில ஐடியில் வேலை பார்த்துட்டு இருந்தேன். நானும் என்னோட பிரண்ட்சும் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து அதில் தங்கி இருந்தோம். செப்டம்பர் 2020யில் எனக்கு கோவித் பாசிட்டிவ் வந்துருச்சு. என்ன பண்ணுறது, எப்படி தனியா இருக்கிறது, பிரண்ட்ஸ் என்ன பண்ணுவாங்க, ஒரே கவலையா போயிடுச்சு. ஆனா என்னோட தோழிகள் கவலைப்படவும் இல்லை என்னை கைவிடவுமில்லை.
அவங்க ஹால்ல இருந்துகிட்டு எனக்கு தனி ரூமை கொடுத்துட்டாங்க. நல்லவேளையா நாங்க குடியிருந்த வீட்டில் இரண்டு பாத்ரூம் இருந்துச்சு. அவங்க ரெண்டு பேரும் எனக்கு மாத்தி மாத்தி எல்லா வேளையும் சாப்பாடு பண்ணி கொடுத்தாங்க. ரொம்ப அக்கறையா கவனிச்சிட்டாங்க. எல்லோருமே வொர்க் பிரம் ஹோம் அதனால சவுகரியமாக போச்சு. என் அம்மா ஊரில் இருந்து வரேன்னு சொன்னாங்க. அவங்க வந்தா இன்னும் பிராப்ளம் ஆயிடும்னு வர வேண்டாம்னு சொல்லிட்டாங்க. சுடுதண்ணி, கபசுர குடிநீர், கஷாயம் மாத்தி மாத்தி வச்சி கொடுத்தாங்க. முட்டை எல்லாம் வெச்சு நல்ல சாப்பாடு செஞ்சு கொடுத்தாங்க. ஆஸ்பத்திரி போகாமல் வீட்டிலேயே தனிமைப்படுத்தி நான் சரி செய்துவிட்டேன். இப்போ மேற்படிப்பும் படிக்கப் போறேன் வேலையும் பார்க்க போறேன். என்னோட இந்த நல்ல நிலைமைக்கு காரணம் என்னுடைய அந்த ரெண்டு பிரெண்ட்ஸ் தான். " ஹேண்ட் பேக்கை திறந்து தன் தோழிகளின் புகைப்படங்களை காண்பித்தாள் ஷீலா.
"அவங்க இப்போ எங்க இருக்காங்க?" வினவினாள் மாதுரி.
"ஒருத்திக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சு. இன்னொருத்தி அதனால வேற வீடு பார்த்துக்கிட்டு போயிட்டா. ஆனா நாங்க மூணு பேரும் எப்போதும் தொடர்பிலேயே இருப்போம். மங்களாவோட கல்யாணத்துக்கு என்னால வர முடியாது அதுதான் வருத்தம் இப்போ எனக்கு."
ஷீலா கூறி முடித்துவிட்டு மாதுரியை பார்த்து "நீ சொல்லு இப்போ" என்றாள்.
"என்ன பத்தி பெருசா சொல்றதுக்கு ஒன்னும் இல்ல. எனக்கு 16 வயது இருக்கும்போது என்னுடைய அம்மா இறந்து போயிட்டா. என்னையும் என் அண்ணனையும் அப்பாதான் ரொம்ப கேர்ஃபுல்லா அப்புறம் பார்த்துக்கிட்டாரு. அம்மா சொல்லிக்கொடுத்த எத்தனையோ விஷயங்களை நான் நல்லா ஞாபகம் வச்சு இருக்கேன். அம்மா சின்ன வயசுல ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க. அதனால எப்போதுமே ரொம்ப சிக்கனமா இருப்பாங்க. பழைய புடவைகளை தைத்து ரொம்ப அழகா மெத்தை செய்வாங்க. கையாலேயே தைப்பாங்க. மணித்தையல், முடிச்சுத்தையல், சங்கிலித்தையல் எல்லாம் தெரியும் அம்மாவுக்கு. எனக்கு நிறைய பிராக் தைத்து போட்டு இருக்காங்க. எந்தப் பொருளையும் வீணாக்க மாட்டாங்க. வீட்டிலேயே செடிகளை வைத்து கொத்தமல்லி கருவேப்பிலை புதினா எல்லாம் வீட்டுக்கு தேவையானது வளர்த்துடுவாங்க. வீட்ல பெரியவர்களை பாத்துக்கணும் , அவங்க கிட்ட இருந்து நல்ல விஷயங்களை கத்துக்கணும் அப்படின்னு அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பாங்க. என்னோட தாத்தா பாட்டி எல்லாம் எங்க வீட்டுல தான் இருந்தாங்க. அம்மா ஹார்ட் பிராப்ளம்ல இறந்துபோன பிறகு பெரியப்பா வீட்டுக்கு போனாங்க. அம்மா எனக்குச் சொன்னது ஒண்ணுதான். உன்னோட திறமைய, உன்னோட டேலண்ட வீணாக்காதே. நல்ல சந்தர்ப்பங்கள் வரும்போது அதை நழுவ விடாதே. அந்த வார்த்தைகளை நான் இன்னும் மறக்கவில்லை. எவ்வளவோ போராட்டங்களுக்குப் பிறகு தான் இந்த மேல்படிப்பு படிக்க சான்ஸ் கிடைச்சிருக்கு எனக்கு. அண்ணனும் அப்பாவும் எனக்கு கொடுத்த சப்போர்ட் மறக்க முடியாது. படிச்சுட்டு இந்தியால வந்து வேலை பார்க்கணும் என்பதுதான் என்னுடைய எண்ணம்." பேசி நிறுத்தினாள் மாதுரி.
" இந்தப் படிப்பையும் நீ இந்தியாவிலேயே படிக்க முடியாதா?" என்று கேட்டாள் ரீனா. "படிக்கலாம் ஆனால் ஸ்காலர்ஷிப் கிடைக்கவில்லை. என்னுடைய பெரியப்பா பையன் அமெரிக்காவில் இருக்கிறான். அவன் ஸ்பான்சர்ஷிப் செய்து நான் இந்த படிப்பை படிக்க போகிறேன். " என்றாள் மாதுரி.
" நம்முடைய பிரச்சனைகளோ கஷ்டங்களோ எதுவுமே இல்லை. நிறைய மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கின்றனர் இந்த கோவித் பிரச்சனையினால். வேற்று மாநில மக்கள் நடந்தே தங்கள் ஊருக்கு சென்ற அவலங்களை டிவியிலும் செய்தித்தாள்களிலும் பார்த்தோம். கோவித் நமக்கு நிறைய பாடங்களை கற்றுத் தந்துள்ளது. முக்கியமாக மனிதநேயத்தையும் உதவும் பண்பாட்டையும்." என்றாள் ரீனா. மற்ற மூவரும் அதை ஆமோதித்தனர்.
"இப்போ வாட்ஸ்அப் ஃபேஸ்புக் எல்லாம் இருப்பதால் நம் நால்வரின் நட்பு தொடர்ந்தே இருக்கும். நாம நாலு பேரும் எப்போதும் காண்டாக்டில் இருக்கலாம். நாளை விசா இன்டர்வியூ முடிந்து நாம் 4 பேரும் வேறு வேறு இடத்திற்கு சென்று விடுவோம். மீண்டும் சந்திக்கும் நாளை நான் எதிர்பார்த்துக் கொண்டே இருப்பேன்" என்றாள் ஷீலா.
நால்வரின் கைகளும் ஒன்றாக சேர்ந்தது. நட்பென்னும் தீபத்தில் அன்பெனும் சுடர் பிரகாசமாக எரிந்தது.
"தொற்றில் கற்றது" என்ற தலைப்பில் நான் எழுதியிருக்கும் இந்தச் சிறுகதை என் சொந்தக் கற்பனை என்று உறுதி கூறுகிறேன்.
சுதா. தி.